செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ஆகாயத்தில் ஒரு வாக்குயுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது.முதற் தாய்

"நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம் ஒரு தீர்ப்பு இருக்கெண்டு நம்பிறன். எங்கட பிள்ளையள கொண்டு, கொத்தி எறிஞ்சு போட்டாங்களோ தெரியாது. மைத்திரியும் சொல்ல மாட்டான், மகிந்தவும் சொல்ல மாட்டான். அதையெல்லாம் யேசு தான் பார்த்துக்கொள்ளுவார். நான் யேசுவ கும்பிடுறனான் பொய் சொல்ல மாட்டன்"

அரிசி பெறக்கி வளர்த்த ராசா 

" எனக்கு அஞ்சு பிள்ளையள் மேனே, இப்ப ஒருத்தரும் இல்லாம தனிய இருக்கிறன். முப்பத்தியாறு வயசு வரைக்கும் இவன் என்னட்ட  இருந்தான். என்னட்டையே சுத்திச் சுத்தி வருவான். எவ்வளவு கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைச்சன். ரோட்டில இருக்கிற அரிசி பெறக்கித்தான் ராசா அவனைப் படிக்க வைச்சன். இப்ப என்ர மகள் என்னைப் பார்க்கிறாள். ஆனா அவளுக்கு நேரமில்லை. கஷ்டம். மூண்டு பொம்பிளைப் பிள்ளையள். அவளுக்கு பாங்கில  வேல. டீ ஊத்திக் குடுக்கிறது, மற்ற வேலைகளும் செய்வாள். பத்தாயிரம் தான் சம்பளம். அவள் எப்பிடி என்னைப் பாக்கிறது. நான் படுக்கையில விழுந்தா ஆர் பாக்கிறது."

சொல்லி நிமிர்ந்து விட்டு "உங்களை போல பெடியளப் பார்த்தா வயித்தைப் பத்தி எரியுது ராசா. என்ன செய்ய. என்ர பெடி" 

அண்ணார்ந்து வானத்தில் வெறித்தாள்.        

அடுத்த தலமுறைக்கு 

"ஐயோ தம்பியவை, இந்த அரசியல்வாதியள நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. இவங்களிண்ட காலில விழுந்து எப்பிடி அழுதம். நாங்கள் அவங்கட சப்பாத்துத் காலில விழுந்தது அத துடைக்கிறதுக்கெண்டு நினைச்சிட்டாங்கள். எல்லாரும் வருகினம் போகினம் ஒண்டுமில்ல. ஒரு மாற்றமும் இல்ல. அவனில்லாட்டா இவன். அவ்வளவு தான் தம்பி. நாங்கள் எல்லாரும் சேர்ந்து என்ன நடந்ததெண்டு புத்தகம் எழுதிப் போட்டு சாகிறது தான் கடைசியா நடக்கும். அடுத்த தலமுறைக்கு என்ன நடந்ததெண்டாவது தெரியட்டும்" 

இந்தக் கதைகளெல்லாம், முந்நூற்று அறுபத்தாறு நாளாய் தொடர் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும், கிளிநொச்சி கந்தசாமி கோயிலுக்கு முன்னாலுள்ள, காணமல் ஆக்கப்பட்டோர் போராட்டப்பந்தலில் அலைந்த கதைகளில் சில. பெருமளவுக்கு உக்கிரமாயிருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் வழமை போல், நூறிலிருந்து முன்னூறு வரைக்கும் தான் வந்தார்கள்.இதற்கான பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் எவர்?

முதலாவது, இங்குள்ள போராட்டங்களில் அதி உணர்ச்சிகரமான போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம். இதில் பொதுப்புத்தி சார்ந்து இரண்டு பிரிவுகளை நான் கவனப்படுத்த விரும்புகிறேன். ஒன்று, இது தேவையானதொரு போராட்டம் தான். ஆனால் பங்களிக்க முடியாது. அல்லது நேரமில்லை. இரண்டு, இதுவொரு தேவையில்லாத போராட்டம், அவர்கள் இறந்து விட்டார்கள் திரும்பி வரப் போவதில்லை. அரசியல்வாதிகள் சனத்தை ஏமாற்றுகிறார்கள். 

இனி இந்த இரண்டு தரப்பிலும் உள்ள பிரச்சினைகளைப் பார்ப்போம். இந்த இரண்டு பிரிவிலும் வேறு வேறு புரிதல்கள் இருந்தாலும் இந்த இரண்டு பிரிவுமே செயலளவில், இந்தப் போராட்டத்திற்கு வருவதில்லை, அதனை உரையாடுவதில்லை, அதனைக் கடந்து போய் விடுகிறார்கள். ஆனால் இரண்டு தரப்பும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதனால், மனது, அவர்களைக் குற்றவுணர்வற்று இருக்க வைக்கிறது. 

இன்னுமொரு தொகுதியினர், இந்த மக்களையும் இந்தப் போராட்டங்களையும் வைத்து பிழைப்புச் செய்து வருவதும் உண்டு. போராட்டத்தை  திரிபு படுத்துவார்கள் உண்டு. மக்களுக்கிடையில் பிளவுகள் உண்டு. பூசல்கள் உண்டு. ஏற்றத்தாழ்வுகள், ஒருத்தருக்கொருவர் சந்தேகங்கள் என்று எல்லாமே உண்டு.ஆனால் தோழர்களே, இது எல்லாமும், இன்னும் நிறையவும் கலந்தது தான் மக்கள் போராட்டம். அது நமது நம்பிக்கைகளின் படி தான் இயங்க வேண்டுமென்று நாம் எண்ண முடியாது. அதே நேரம் தர்க்கம் மட்டுமே வாழ்க்கையோ போராட்டமோ அல்ல. தர்மமும் அறமும் தான் வாழ்க்கையும் போராட்டமும். 

இங்குள்ள மக்களின் அடிப்படையான பிரச்சினையாக நான் பார்ப்பது, இளம் தலைமுறையும் மூளைசாலிகளுமாய் உள்ள பெருந் தரப்பு இந்தப் போராட்டங்களுக்கு வெளியேயிருப்பது தான். அவர்களும் இந்த மக்களின் நிலைக்காய் இரங்குவர், ஆனால் தமது வாழ்க்கையிலிருந்து சிறிய பகுதியை அவர்களுக்காய் அவர்களால் ஒருபோதும் செலவளிக்க முடியவில்லை. அதனை இடைவெளியாய்ப் பயன்படுத்தி அரசியல்பிரதிநிதிகளோ, அல்லது வேறு சக்திகளோ இவற்றை குழப்பவும், குத்தகைக்கு எடுக்கவும், சீரழிக்கவும் முடியும். ஆகவே, நம்பிக்கையிருப்பவர்களும் சரி, உடன்பாடு இல்லாதவர்களும் சரி தொடர்ச்சியாக இந்த மக்களுடன் உரையாடுவதில் தடையில்லைத் தானே. அவர்களிடம் கொஞ்ச நேரம் கதை கூடக் கேட்க முடியாதா எங்களால்?. குறைந்தது, சொல்லியழுதாவது அவர்கள் தங்களைத் தேற்றிக்கொள்வார்கள்.  

நாம் என்ன தர்க்கம் சொல்லியும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. அல்லது அப்படிக் கைவிட்டாலும் அவர்கள் அதனைக் கடக்கப் போவதில்லை. "மகனை நினைத்து நினைத்தே என்ர மனுசன் செத்துப்போனார்" என்ற தாய்க்கு நம்மால் என்ன செய்யமுடியும். இந்தப் போராட்டங்கள், ஒரு வகையில் வாழும் நம்பிக்கையை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையை நாம் கொடுக்க முடியுமா? உலகில் எதனால் அது முடியும். 

நீண்டு செல்லும் இந்தப் போராட்டம், சரியான வகையிலான இளைஞர் பங்கேற்பின் மூலம் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு அதனைப் பொறுப்பெடுக்க வேண்டியவர்கள், அடுத்த தலைமுறை தான். அதனை எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை. 

போராடும் எல்லாப் பந்தல்களுக்கும் அருகிருக்கும் இளைஞர்கள் ஏன் இந்த மக்களை தினசரி சந்திக்கக் கூடாது, மற்றவர்கள் இடைக்கிடையாவது, ஏன் சாதாரணமாக சந்தித்துக் கொஞ்ச நேரம் கதைக்கக் கூடாது? இதனை முதல்  முயற்சியாக நாம் செய்து பார்க்க முடியும், முந்நூற்று அறுபத்து ஆறு நாட்களுக்குப் பிறகாவது. 

இந்த உள்ளுராட்சித் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளான இளம் தலைமுறையினர் தமது அரசியல் பயணத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை அணுக   வேண்டும். மக்களின் பிரச்சினைகளை, அதன் பல்பரிமாணங்களை நேரடியாக அறிதலும், அதனூடாக மக்களிணைப்பும் உருவாகினால், எதிர்காலத்தில் கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி ஏற்படும். இல்லையென்றால் இன்றைக்கு வந்திருந்து தங்களுக்குள் குசலம் கதைச்சுப்போட்டு, அரசியற் பகிடிகளை விட்டுவிட்டு, சடங்குக்கு வந்திருந்து சென்ற மற்றைய பிரதிநிதிகள் போல் நீங்களும் ஆகிவிடுவீர்கள். நீங்கள் அப்படியில்லையென்பதை மக்களிடம் நிரூபிக்க வேண்டும், நம்பிக்கையை விதையுங்கள், அதை வளர்த்தெடுங்கள்,  காப்பாற்றுங்கள். 

அடுத்து மூளைசாலிகளே, அறிவுஜீவிகளே, நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?, விரல்விட்டு எண்ணக்  கூடியவர்களைத் தவிர வேறு யாரும் பொருட்படுத்தும் படி எந்த ஆலோசனையையும் மக்களுக்குத் தங்கள் எழுத்துக்களின் மூலமோ, செயல்களின் மூலமோ வழங்கவில்லை. சில கலைஞர்கள் அரிதாக ஏதாவது செய்வதோடு சரி, அதற்கு மேல் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பது எங்களது பிழை தான்.ஆகவே, பிரதானமாக இந்த விடயங்களில் பங்களிப்போர், அதனை வெளிப்படுத்துவோர் என்ற இருபிரிவினரையும் இணைக்கும் புள்ளிகளை நாம் உரையாட வேண்டும். இன்னும் நாம் யாருக்காகக் காத்துள்ளோம்? நாம் தான் இனி நடைமுறையை உருவாக்க வேண்டும். நமது சிந்தனைகளையும் செயல்களையும் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்துவதற்கும், வீணான விவாதங்களில் செலவழிப்பதற்கும் ஓய்வொழிச்சல் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் நாம், குறைந்த பட்சம் நம் வாழ்வின் சிறு பகுதியையேனும் அவர்களுடன் செலவிடவேண்டும். 

கும்பாபிஷேகம் 

போராட்டத்திற்கு மத்தியானம் பன்னிரண்டு மணியளவில் பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று வந்தது. ஏறக்குறைய நாற்பது பேர், பக்கத்திலிருந்த அம்மா, இவை இப்பையே வருகினம் என்று விட்டு சோம்பலாய்த் திரும்பினார். 

மத்தியானம் சாப்பாடு தந்தார்கள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, எங்களுக்குப் பக்கத்திலொருவர் வந்தார், காலில் செருப்பில்லை, அழுக்குப்படிந்த சாரமும் சேட்டும், வழுக்கை விழுந்திருந்தது, கண்கள் சிவந்திருந்தன. 

அருகில் வந்திருந்தவர், தாழ்வான குரலில், "தலைவர் வந்திட்டார்" என்றார். இரணைமடுக்குப் பக்கத்தில ஐயாயிரம் பேரோட ரெடியா நிக்கிறார். கேட்டனியளே செய்தி என்று மிக ரகசியமாகச் சொன்னார். நாங்கள் சிரித்துக்கொண்டு மறுமொழியளிக்க, நிதானித்து விட்டுச் சொன்னார், கருணா அம்மான் சொன்னதைக் கேட்டியளே, ஒன்பது கரும்புலி வருகுதாம், அதுக்குப் பிறகுதானாம் யாழ்ப்பாணத்தில ஆமிக்குக் கும்பாபிஷேகம்.

நன்றி, வணக்கம்.       

சனி, 10 பிப்ரவரி, 2018

எதிர்ப்பின் கொண்டாட்டம்

*"The Casteless collective " நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த "குரங்கன்" சுயாதீன இசைக்குழுவின் 'தென்மா' தான் இந்த புதிய குழுவினதும் இசைத்தயாரிப்பைச் செய்கிறார். பா. ரஞ்சித் தனது நண்பர்களுடன் இணைந்து நிகழ்த்தும் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமான பண்பாட்டு அரசியல் நிகழ்வு. அரசியல் மயப்படுத்தல் தான் இந்த இசையின் ஒரே குரல். சாதியின் பெயரில் தங்களுக்கு நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அநீதிகளின் கதைகளை அவர்கள் பாடுகிறார்கள். கொண்டாட்டம் ஒரு எதிர்ப்பு வடிவமாக எப்படி இயங்க முடியுமென்பதற்கு இதுவொரு முன்னோடியான உதாரணம்.

ஒரு வகைப்பட்ட  கானாப் பாடல்களையே தொடர்ச்சியாக தமிழ்ச்சினிமா எங்களுக்குப் பழக்கப்படுத்தியிருக்கிறது. அது அநேகம் ஒரு நண்பனின் காதலுக்காக ஆறுதல் சொல்வதும்,  குத்துப்பாடலுக்கொரு மெட்டுப்போலவும் வந்து பதிந்திருக்கிறது. ரஞ்சித்தின் வருகை அதனை மாற்றியது. கானாவை, தான் நம்பும் மாற்றத்தின் இசையாய் கருத்தியல் வடிவில்  முன்வைக்க அவரால் முடிந்திருக்கிறது. அவருடைய படங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவரும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறை. அதன் கொண்டாட்டம். அதன் துக்கம். அதன் கலகம் என்பன எழுச்சியான மனநிலையையும் ஆரோக்கியமான மாற்றத்தையும் நோக்கி ஒடுக்கப்பட்ட மக்களை நகர்த்தும் என்று நம்புகிறேன். அறிவின் மூலமான சமூக மாற்றத்தைக் கோரும் ரஞ்சித், நீலம் பண்பாட்டு மையத்துடன் இணைந்து தனது வெளிச்சத்தை இந்த இசைக்குழுவிற்கும் இந்த நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துவது அதனை ஆழமான மற்றும் அகலமான அளவில் சமூகத்திற்குள் கொண்டு சேர்க்கும்.

மகிழ்ச்சி ரஞ்சித்.     *

பல மாதங்களிற்கு முன்பு கேரளாவில் ஒரு பொலிஸ் நிலையம் அருகே வைத்து நீளமான தாடி, தலைமுடி வைத்திருந்தமைக்காக 'தீவிரவாதி' என்று விசாரணை செய்யப்பட்ட  சுயாதீன இசைக்குழுவொன்றின் பாடகர் ஒருவர், அடுத்த நாள் அந்தப் பொலிஸ் நிலையத்திற்கெதிரே வந்தொரு பாடலைப் பாடினார்.

"நாங்கள் மீசை வளர்ப்போம்
தாடி வளர்ப்போம் முழங்கால் தொடும் வரை முடியும் வளர்ப்போம்
அது எங்கள் இஷ்டம்.

எங்கள் உடம்பில் உள்ள மயிரைக் கூட உங்களுக்கா எழுதித்தர வேண்டும்.
உங்கள் கையில் பாசிசக் கோல் உண்டு.

ஆனால் எங்கள் தெருக்களில்
எங்கள் வயல்களில் எப்படி நடப்பதென்று
எங்களுக்குத் தெரியும்"

இது தான் அதன் சாரமான வரிகள். திரும்பத் திரும்ப பல நூறு முறை அந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன். மனித சுதந்திரம் தான் எத்தனை பெரியது? அதன் ஒவ்வொரு வரியும் அதிகாரத்திற்கெதிரான உயிரின் கலகமே. விடுதலை அதன் மைய இழை.

*
ஈழத்தில், அதுவும் யாழ்ப்பாணத்தில் உள்ள சாதியென்பது உள்ளோடும் விஷம். நான் முதல் முறையாக 'ஒருகைப்பறை' பழகிய போது, சாகாத அந்த நோயை மறுபடியும் நேரடியாகச் சந்தித்தேன். புத்தர் கலைக்குழு "மணிமாறன்" அண்ணன் தான் என் "பறை" ஆசான்.

"தங்கச்சிய என்ன பறையனுக்கே கட்டிக்குடுக்கப் போறாய்' "இவனுக்கேன் தேவையில்லாத வேலை" "பறையை வீட்ட வச்சிருந்தா ஆக்கள் என்ன நினைப்பினம்" என்று சொந்தக்காரர்கள், அப்பாவுக்கு வந்து குறை சொல்லிக்கொண்டேயிருந்தனர். 'அவன் என்ன செய்யிறான் எண்டு அவனுக்குத் தெரியும்" என்று அப்பா சொன்ன பின் தான் அடங்கினார்கள். இவ்வளவு காலமும் இவர்கள் எந்தப் புற்றுக்குள் ஒளிந்திருந்தார்கள்.

ஈழத்தில், எவ்வளவு தான் சாதி இல்லையென்று நாம் வேட்டியைக் கட்டி மறைத்தாலும், அதன் அரூப நிழல்கள் எல்லா மனங்களிலும் விழுந்து கொண்டுதானிருக்கிறது. அதன் சமீபத்தைய உதாரணம், மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றும் போராட்டம் வலுப்பெற்று எழுந்த போது, நகரமெங்கும் சாதித்தடித்தனங்கள் இரவில் கள்வர்கள் போல் வந்து சேர்ந்தன. 'மக்கள் முதலில் வந்தார்களா? மயானம் முதலில் வந்ததா?" என்று பட்டி மன்றம் நடத்தினார்கள். சரி, அவர்களின் மொழியிலேயே கேட்போம் என்று "மக்கள் முக்கியமா ? மயானம் முக்கியமா" என்று கேட்டோம். அதற்கு வாயை மூடிக்கொண்டு மறுபடியும் யார் முதலில் வந்ததென்று வகுப்பெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தாத்தாமார்களின் சொகுசுத்தனங்களையும் அவர்கள் மற்றவர்களை உறிஞ்சி உருவாக்கிவைத்திருக்கும்  வாழ்க்கை முறையையும் கைவிடமுடியாத பேரர்கள் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாயே மதிக்க மாட்டார்கள்.

திருநெல்வேலியில் உள்ள பாற்பண்ணையிலும்  மயானப் பிரச்சினை உள்ளது. இங்கேயும் கூலித்தொழிலாளிகளும் அன்றாடம் உழைத்து வாழ்பவர்களுமே அதிகம். இது எந்தவகையிலான ஒத்தத்தன்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலில், யாழ்ப்பாணத்தின்  பெரும்பாலான சிறுநகரங்களில் ஆதிக்க சாதியினரை மையமாகக் கொண்டு வெவ்வேறு சாதியினர் அடுக்கடுக்காக இருப்பர்.  உதாரணத்திற்கு திருநெல்வேலியை எடுத்துக்கொண்டால், அதன் மையமான சந்தியில்  வெள்ளாளர்கள் உள்ளனர். மையத்திலிருந்து வெளிநோக்கிச் சென்றால் தச்சர்கள், கொல்லர்கள் மற்றும் இன்ன பிற இடைநிலைச்சாதியினர் உள்ளனர்.  அதனைத்தாண்டி அதன் மையமான இடத்திலிருந்தொரு மூலையில் பாற்பண்ணையில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த அடுக்கின் அமைவுகள் தற்செயலானவையல்ல. இது சாதி அடிப்படையிலேயே உருவாகிய நகரம். இதன் இறுக்கங்களும் பழைய நடைமுறைகளும் குறைந்திருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் வாழ்கின்றன.

பாற்பண்ணையிலிருக்கும் அதிகமான இளைஞர்கள் திருநெல்வேலிச் சந்தியில்  மூட்டை தூக்குகிறார்கள், ஆட்டோ ஓட்டுகிறார்கள், கூலித்தொழில் செய்கிறார்கள், சைக்கிள் கடையில் வேலை செய்கிறார்கள், சீவல் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். இவை எல்லாம் ஏதோ இயல்பாக நடப்பதென்று நாம் சொல்லிக் கடந்து விட முடியாது. நமது மக்களின் இந்த நிலைக்கு வலுவான வரலாற்றுக்கு காரணங்கள் உள்ளன. அவற்றை நாம் அறிந்து கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையில் இன்று பாதிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும் விடயங்கள் எவையும் தானாய் நிகழ்ந்தவையில்லை என்றும் இந்த நிலை மாறவேண்டுமானால் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்றும் புரிந்துகொள்ளலாம்.

இந்த இடத்தில் தான் கடந்த காலப் போராட்டங்களைப் பார்க்கிறேன். இடதுசாரி இயக்களினாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அமைப்புகளாலும் எவ்வளவு ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட காலமிது. நாம் வரலாறு தெரியாதவர்களாக, அரசியலற்றவர்களாக அல்லது வெற்றுக் கோஷ அரசியலை முன்வைப்பவர்களாக இருக்க முடியாது.

இன்றும் யாழ்ப்பாணத்தின் கரையோர மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை கொடுமையாகத் தான் உள்ளது. குப்பைகளுக்கிடையிலும் மயானங்களுக்கிடையிலும் ஒரு வீடு.

நான் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் படித்துக்கொண்டிருந்த போது குருநகருக்கு ஒவ்வொருநாளும் போவேன், தார்ச் சாலையில் வலை காய வைத்திருப்பார்கள். அநேகமான காலைகளில் யாரவது இரண்டு பெண்கள் சத்தமாகச் சண்டை பிடித்தபடியிருப்பார்கள். நடக்கும் சண்டையைச் சுற்றி பெடியள் சிரிப்பார்கள். குழந்தைகள் காலுக்கலும் கையுக்காலும் ஓடித்திரிவார்கள். பிறகு, மத்தியானம் திரும்பிப் போகும் போது அதே இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் பேன் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பள்ளிக்கூடம் முடிய வரும் சின்னப் பெடியள் புட் போலை உதைத்துக்கொண்டு மழை நீரில் நீந்துவார்கள். அடுக்குமாடிக்குடியிருப்புகள். ஒரே கலர் வீடுகள். புது வருஷம், விஜய், அஜித் பிறந்த நாள் எல்லாம் களை கட்டும். பெரும்பாலான வீடுகளின் முன் பெரிய பொக்ஸ் வைத்துப் பாட்டுப்போடுவார்கள். அவர்களின் ரசனை வித்தியாசமானது. எப்பொழுதும் 'கும் கும்மென்று' அதிரும் பாடல்களால் இரவையும் பகலையும் தெறிக்க விடுவார்கள்.   

இப்படியான ஊரில், அந்தச் சூழலிலுள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் தான் அவர்கள் படிப்பார்கள், அதற்கு மேல் கொஞ்சம் அதிகம் படித்து முன்னேறுபவர்கள் குறைவு. அப்படியே கல்வி ரீதியில் முன்னுக்கு வருபவர்கள், தமது சமூக அடையாளத்தை மறைத்து, அந்த  சமூகத்தைக் கைவிட்டு தங்களை மேன்நிலையாக்கம் செய்கின்றனர்.

சமூக விடுதலையென்பது, எல்லா வகையான தளைகளிலிருந்தும் விடுதலை பெறுவது தான். சமூக நீதியுள்ள ஒரு சமூகத்தைக் கனவு காணும் ஈழத்தமிழர்களிடையில் ஒரு அம்பேத்கார் உருவாகவில்லையென்பது எத்தனை பெரிய இழப்பு. தமிழக சாதிய நிலவரங்களையும் அதன் கொடுமைகளையும் போல் இங்கே கொடுமைகள் சற்றுக் குறைவென்றாலும் இங்கிருப்பது மட்டும் யோக்கியமான நிலவரமல்ல. படித்தவொரு சமூகம் இதன் கட்டுகளிலிருந்து விழித்தெழும் காலம் வர வேண்டும்.         

*"The Casteless collective" நிகழ்ச்சியை முழுவதும் பார்த்த போது, ஒரே நேரத்தில் ஒடுக்கப்படும் மக்களின் துயரின் குரலாகவும் எதிர்ப்பின் கொண்டாட்டமாகவும் நிகழ்வு மாறியிருந்தது.

அதிகாரத்திற்கெதிரானதும் ஒடுக்குதலுக்கெதிரானதும் குரலில் சில வித்தியாசங்கள் உண்டு. உதாரணம் மத்தியதரவர்க்க குரலில் சமூக மாற்றத்தையும் சுயசிந்தனையையும் பாடுதல், குரங்கன் இசைக்குழு எனக்கு மிகப்பிடித்தமானதொரு குழு. ஆனால் அவர்களின் கருத்தியல் அல்லது குரலின் 'தன்னிலை' என்பது எதிர்ப்பின் குரலில்லை. அவை இந்த சமூகத்தில் இருக்கும் சுயசிந்தனையின்மையை  தொடர்ந்து கேலி செய்யும் அல்லது சிந்திக்கச் சொல்லும் பாடல்கள்.

" ஊரே கைகொட்டி சிரிச்சா நானும் கைகொட்டி சிரிப்பன்
ஊரே கெணத்துக்குள்ள குதிச்சா நானும் கண்ணை மூடி குதிப்பன்

சுயமா உட்க்கார்ந்து யோசிக்க யாருக்கு நேரமிருக்கு..."

கேலியும் கேள்வியுமாய், மத்தியதரவர்க்கத்துடன் தனது உரையாடலை நிகழ்த்துகிறது இந்தப் பாடல். "தண்ணி இது தான்...", " சுதந்திரம் ஒரு டப்பா, இந்த நாலு சுவத்துக்குள்ள..." போன்ற பாடல்களிலும் தத்துவார்த்த மற்றும் மத்தியதர வர்க்க வாழ்வின் அலைச்சல்களுக்குள் உள்ள சுயசிந்தனையின்மையையே தொடர்ந்தும் 'கேபர் வாசுகி' பாடுகிறார்.

இன்னொரு வெளியில், விளிம்பு நிலை மக்களின் அசலான குரல்கள் பாடும் போது, அந்தக் கதைக்கும்  அந்த நியாயத்திற்கும் அந்தக் கேள்விக்கும் இருக்கும் எடை என்பது அவர்கள் தலைமுறை தலைமுறையாய் அனுபவித்த துயர். ஒவ்வொரு பாடலிலும் நெஞ்சு அலைந்து அமிழ்ந்தது.

"காலு ரூபா துட்டுன்னாலும் கவர்மண்டு துட்டுன்னு
ஊரு புல்லா சுத்துறேண்டா பீய வாரி கொட்டின்னு
மக்கிப்போன குப்பைன்னாலும் வாருவேண்டா டக்குன்னு
அப்பத்தாண்டா சொல்லுவீங்க நீங்க இத சிட்டின்னு"

கைகளால் மலமள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்தப் பாடலும், அதற்கு நிகழ்ச்சியில் அவர்கள் வைக்கும் முன்சொல்லும் முக்கியமானவை. திவ்விய பாரதியின் "கக்கூஸ்" ஆவணப்படம் உருவாக்கிய பாதிப்பு மிக ஆழமானது. முகத்தில் சாட்டையால் அடித்து, மனிதர்களை கையால் மலமள்ள விட்டுவிட்டு  நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டது அது. பாடலைக் கேட்கும் போது அந்த ஆவணப்படத்தில் வந்த முகங்களும் அவர்களின் கதைகளும் கண்ணீரின் ஊடே கலைந்து மங்கலாகத் தோன்றியது.

(யாழ்ப்பாணத்திலும் வீதி கூட்டும், துப்பரவு செய்யும் தொழிலாளர்களில் பெரும்பானமையானவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களே. அவர்களின் வாழ்க்கையை நாம் என்றாவது பார்க்கிறோமோ? ஏன் எங்களால் பார்க்க முடியவில்லை. ஏன் எங்களால் அவர்களின் குரலைக் கேட்க முடியவில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.)


விளிம்பு நிலை மக்களின் காதல், ஏற்கனவே சமூகத்தில் உள்ள புனித பிம்பங்களுக்கு மாற்றானது. ஆனால் புதிய குணம், புதிய பரவசம். பத்திரிகையாளர் சந்திப்பில் அறிமுகப் பாடல்கள் துணுக்குகளாகப் பாடியிருந்தனர். அதில் இசைவாணியின் இந்தப் பாட்டை இருபது முறை திரும்பத் திரும்பக் கேட்டு விட்டேன். துள்ளும் உயிரின் காதல் அது."ஏ கருப்புக்குல்லா
கமருக்கட்டு
சிட்டியில உன்னைத் தொட்டு
உதட்டழகி ஒட்டிப்போனன் உன்னால

ஏ பாயும் புலி ; பதுங்கும் நாகம்
வழியவிட்டா ஒதுங்கிப் போகும்
என்னென்னமோ பண்ணுறியே தன்னால"

இசைவாணி போன்று இன்னும் வேறு பெண்பாடகர்கள் இசைக்குழுவிற்குள் உள்ளீர்க்கப்படல் வேண்டும். பெண் கானாப் பாடகர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறதென்றார் ரஞ்சித். தமிழ் சமூகத்தில் பெண்கள் வெளியே சென்று இரவுகளில் பாடல்கள் பாடுவதில் உள்ள சிரமங்களைப் பற்றி ஒரு நேர்காணலில் இசைவாணியும் குறிப்பிட்டிருந்தார்.     

ஆரம்பத்தில் குறிப்பிட்ட "பண்பாட்டு அரசியல் நிகழ்வு" என்பதனை சற்று விளக்கமாகப் பார்க்கலாம். அரசியல் விழிப்புள்ள கலை அல்லது நேர்மையான அரசியலை முன் வைக்கப் பயன்படுத்தும் கலையென்பவற்றுக்கு, அறிதலின் கொண்டாட்டம் இருக்கிறது. அது ஒரே நேரத்தில் கொண்டாட்டமாயும் எதிர்ப்பின் வடிவமாயும் இருக்கும். இதனை "கார்னிவெலஸ்க் " என்ற அறிவார்ந்த எதிர்ப்பு வடிவத்துடன்  தொடர்புபடுத்திப் பார்க்கலாம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தை எழுச்சி கார்னிவெலஸ்க்கின் அத்தனை தன்மையும் பொருந்தியவொரு நிகழ்வு. இந்த சுயாதீன இசைக்குழு உருவாக்கம்  "அரசியல்" என்ற தெளிவான வடிவத்தை முன்னிறுத்திய அறிவார்ந்த / விழிப்புற்ற ஒரு உருவாக்கம். பாடல்களில் தொனிக்கும் கேலியும் அதிகார எதிர்ப்பும் கார்னிவெலஸ்க்கின் கூறுகள் தான்.

"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற மாபெரும் மானுடக் கனவை நோக்கியே அனைத்துப் பேரியக்கங்களும் சமூக அறங்கள் பற்றிய உரையாடலும் நகர்கின்றன. இந்த மூன்றும் இந்த இசைக்குழுவின் பாடல்களில் வெளிப்பட்டு நகர்ந்து ஒவ்வொருவரையும் சென்று தழுவிக்கொள்வதை பார்க்க முடிகிறது."நாங்க பிளாட்பாரம் எங்க நிலம எப்ப மாறும்", "வா சொன்ன வட சென்னை " "கறி..." போன்ற பாடல்கள் அற்புதங்கள். நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டு நகரும் போது அநேகம் பேர், கதிரையில் இருந்து கை தட்டிக்கொண்டிருந்தார்கள். இறுதியில் தான் வளர்ந்தவர்கள் பலர் ஆடத் தொடங்கினர். ஆனால் சிறுவர்கள், தொடக்கம் முதலே இசைக்கு ஆடிக்கொண்டிருந்தனர். ஒரு தாய் தன்னை மறந்து அந்தக் கூட்டத்தில் முகமெல்லாம் சிரிப்பாக ஏதோவொரு காலத்தின் அந்தத்திற்குச் சென்று ஆடிக்கொண்டிருந்தார். பறை, தோலில் பிறந்த இசை. இடையில், ஒரு பாடலுக்கு தொலைபேசியில் உள்ள விளக்குகளை ஒளிரவிட்டுக் கைகளை அசைக்கும்படி கேட்டனர். மெரினாவில் நிகழ்ந்த அந்த ஒளியலைவரிசை ஒரு எதிர்ப்பின் வடிவம் என்றால், இங்கு நிகழ்ந்த ஒளியசைப்பு, ஏற்பின் வடிவம். அவர்களின் கதைகளையும் அவர்களின் சமூக நீதியையும் ஏற்றுக்கொண்டதற்கான குறியீட்டு அசைவு. சமூகத்தின் பேரிருளிற்குள் விழும் வெளிச்சத்தின் கீற்றுகள்.   

கிரிஷாந்

Links - https://www.youtube.com/watch?v=8A7Z67lU9pYசெவ்வாய், 6 பிப்ரவரி, 2018

இலக்கியமும் அரசியலும்

இலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல்

உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி எழுந்துள்ளன. குறித்த அரசியல் நிகழ்வுக்கான விவாதங்களை நிகழ்த்துதல், அல்லது சாட்சியமளித்தல் என்ற இரண்டும் தான் அதன் பிரதான இயங்குதிசைகள். இரண்டு வேறு வேறு நாவல்களையும் எழுத்தாளர்களையும் அரசியல் நிகழ்வுகளையும் கொண்டு இதன் தன்மைகளை உரையாடலாம்.

ஒன்று, வாசு முருகவேல் எழுதியுள்ள ஜெப்னா பேக்கரி. 'முஸ்லிம்கள் வெளியேற்றம்' என்ற அரசியல் நிகழ்வை மையப்படுத்திய பிரதி. மற்றையது காப்பிரியல் கார்சியா மார்குவேஸ் எழுதிய                    
 "Living to tell tale ". "Banana massacre " என்ற தொழிலாளர்கள் படுகொலையை மையப்படுத்திய பிரதி. இரண்டு வேறுபட்ட அரசியல் நிகழ்வுகள் என்றாலும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எவ்வாறு இலக்கியத்தில் கையாள முடியும். அது எவ்வளவு தூரத்திற்கு கலையாக ஆகிறது என்பது பற்றிய எனது சில கருத்துக்களை முன்வைக்க இவற்றைப் பயன்படுத்துகிறேன்.

மார்க்குவேசின் பிரதியில் வரும் ஒரு வாக்கியத்தை இங்கு சொல்வது பொருத்தமென்று நினைக்கிறேன். "வாழ்க்கை என்பது ஒருவர் வாழ்ந்ததல்ல. ஒருவர் எதை நினைவு கூர்கிறார். எந்த ஒழுங்கில் என்பது தான்". இந்த வாக்கியத்தை ஜெப்னா பேக்கரியுடனும் நாம் இணைத்து  வாசிக்கலாம். ஒருவர் ஒரு காலகட்டத்தில் எதற்காக நேரடி அரசியலைப் பேசும் பிரதியை முன் வைக்கிறார்? குறித்த சம்பவத்தை எதற்காக நினைவு கூர்ந்து எழுதுகிறார்? என்ன ஒழுங்கில் எழுதுகிறார்?

ஜெப்னா பேக்கரியை சாட்சிய வகை நோக்குக் கொண்ட பிரதியாகவே நான் புரிந்து கொள்கிறேன். முஸ்லிம்கள் வெளியேற்றமும் அதனையொட்டி எழுந்த கடுமையான விமர்சனங்களும் தொடர்ச்சியாக பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. அதற்கான நேரடி சாட்சி அனுபவங்களும் கதைகளும் ஏராளமாக எழுத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அதன் காரணங்களை நோக்கி விவாதத்தை திருப்பாத ஒரு போக்கே பெரும்பாலான கதைகளில் இருந்து வந்திருக்கிறது. இந்த இடத்தில்  வெளியேற்றம் தொடர்பில் அதிகபட்சம் நாற்பது கதைகளளவில் தான் வாசித்திருக்கிறேன். அதற்கு வெளியே எங்கேயேனும் வேறு பதிவுகள் செய்யப்பட்டிருந்தால் அத்தனையும் இணைத்தே சூழலை விளங்கிக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன்.  பொதுவாக வெளியேற்றத்தின் போது இடம்பெற்ற துயர நிகழ்வுகள் அல்லது தமிழ் - முஸ்லீம் உறவு நிலை பற்றிய சித்தரிப்புக்களடங்கியவை தான் முழுவதும். இதற்கு சற்று அப்பால் நின்று "முஸ்லீம் ஊர்காவல் படை" அதன் தோற்றம், அதன் இயங்குமுறை, அதற்கும் வெளியேற்றத்திற்குமிருக்கிற  தொடர்பு பற்றி பெரும்பாலான பிரதிகள்  அணுகவேயில்லை என்பதை நாம் அவதானிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே ஒரு அரசியல் பிரதி என்ற அடிப்படையில் ஜெப்னா பேக்கரி பேச முனைந்த பார்வைக்கோணம் சார்ந்து அதற்கொரு முக்கிய பங்கிருக்கிறது.

ஊர்காவல் படை நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களை தொகுத்தலோ / அதன் தரப்பில் ஊர்காவல் படை எழுந்து வந்த பின்னணியை விரிவாக ஆராயவோ வேண்டும். இந்தப் பின்னணியில் ஜப்னா பேக்கரியில், உள்ள மொழி சார்ந்த மற்றும் விபரிப்பு முறை சார்ந்த குறைபாடுகளினால்,  அடிப்படையில் தேவையான நுட்பமான அவதானங்களும், தரவுகளும் பிரதியில் உருவாகி வரவில்லை. பொத்தம் பொதுவான அறிவில் கிடைக்கக் கூடிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டே ஊர்காவல் படை பற்றிய சித்தரிப்புக்கள் வருகின்றன. அதுவும் மூட்டமான நிலையில் கலங்கலாக.அத்தோடு ஜெப்னா பேக்கரியை ஒரு மையப் படிமமாகக்  கொண்டாலும், ஜெப்னா பேக்கரி ஒரு வலுவான படிமமாக கதைச் சூழலில் உருப்பெறவில்லை. பேக்கரியெனும் இடத்தை சித்தரிப்பதென்பது எத்தகையதொரு அனுபவம். பேக்கரியென்பது நினைவில் வாசனை. வாசனைகளுக்கு நினைவுகளைக் கிளர்த்தும் தன்மையுண்டு. அதே நேரம் வாசகரை  தன்னுடைய சொந்த அனுபவத்துடன் இணைத்து தனக்கு நெருக்கமானதொரு இடமாக அதை மாற்றியிருக்கவும் சாத்தியங்களிருக்கின்றன. ஆனால் கதையில் வரும் உதிரியான சித்தரிப்புகள், அதைச் சாத்தியமாக்கவில்லை. இதே போலவே, பிரதியின் பல கதாபாத்திரங்கள் நினைவில்த் தங்காது வெளியேறிவிடுகின்றனர். விரிவான அக உலகத்தை உருவாக்கியிருந்தால், பிரதியின் தன்மை மாறுபட்டிருக்கும். "கொசுணாமணியர்" என்ற பாத்திரம் வருகின்ற பகுதி மிக நேர்த்தியான விவரணைகளூடாக மனதில் நிலைக்கிறது. அதே போல் முஸ்லிம்கள் வெளியேறும் பகுதியிலும் சித்தரிப்பு நேர்த்தியிருக்கிறது. இவை தவிர பிரதியெங்கும் விக்கி விக்கி அல்லது விழுங்கி விழுங்கிக் கதை சொல்லும் போக்கே அவதானிக்க முடிகிறது. கலை, நுண்ணுணர்வை அதிகம் கோரும் நிகழ்தல். அதில் வாசு முருகவேல் கவனம் செலுத்த வேண்டும்.         

மேலும், வெறுப்பை விதைத்தலென்பது எல்லா தனிக்குழுக்களுள்ள  / பல்கலாசார சூழலில் உருவாகக் கூடிய நிலைமை தான். கலாசார வேற்றுமைகள் / மத ரீதியிலானதும் சமூகக் கட்டமைப்புச் சார்ந்தும் உருவாகக் கூடிய அந்நியத்தனமைகள் என்பன இணைந்து உருவாக்கக் கூடிய புற நிலைமை தான் தமிழ் - முஸ்லீம் உறவுச் சிக்கல். அதனை இலக்கியப் பிரதிகள் முன்வைக்கும் பார்வைக்கோணமென்பது பெரும்பாலும் எழுதுபவர்  தீர்மானிப்பது தான். 

இன்று (யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்) முஸ்லிம்கள் தங்களுடைய வெளியேற்றம் தொடர்பான நினைவு கூரல்களை யாழ்ப்பாணத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் வெளியேற்றம் தொடர்பான ஒருவகைப்பட்ட ஞாபகங்களை மட்டுமே உருவாக்கும் போக்கு வலிமையாகும் வேளையில், ஈழத் தமிழ் அறிவுச் சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்பில் மிகக் கடுமையான எதிர்வினையை விடுதலைப்புலிகளுக்கு ஆற்றியிருந்த போதிலும், இதுவரைக்கும் எந்தவொரு முஸ்லீம் எழுத்தாளரும் தங்களுடைய கதைகளிலும் பொது அரங்குகளிலும் "முஸ்லீம் ஊர்காவல் படை" நிகழ்த்திய வன்முறைகளுக்கு மன்னிப்போ அல்லது கண்டனமோ அல்லது வருத்தமோ தெரிவிக்காத வேளையில், விவாதங்களை தமது தரப்பிலிருந்து முன்னெடுக்காத வேளையில் இந்தப் புத்தகத்தின் வருகை ஞாபகத்தினை விவாதத்திற்குள்ளாக்கும் வேலையைச் செய்ய முடியும்.

முஸ்லீம் எழுத்தாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் சமூகத் தலைமைகளுக்கும் எவ்வளவுக்கெவ்வளவு தமக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகப் பேச வேண்டிய பொறுப்பு உள்ளதோ. அவ்வளவுக்கவ்வளவு  சம பொறுப்பு தமது சமூகத்தினரால் பிற சமூகத்தினருக்கு  நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறைக்கெதிராக தமது சமூகத்திடம் விமர்சனத்தை முன்வைப்பதும், விவாதிப்பதும், அதற்கான பொறுப்பைக் கூட்டாக ஏற்கும் பொறுப்பும் உள்ளது. பிறர் செய்யும் தவறுக்கு நாம் எப்படி பொறுப்பேற்பது என்று தட்டிக்கழிக்கத் தேவையில்லை. எதிர்கால நோக்கில் சமூகங்கள் ஆரோக்கியமான அக ஜனநாயகத்தையும் புற ஜனநாயகத்தையும் உருவாக்குவதில் இந்த விவாதங்களிற்கு முக்கிய பங்குண்டு. அதுவே நீண்ட கால நோக்கில் சிறுபான்மை இனங்களுக்கான விடுதலை பற்றிய உரையாடலை திறந்த மனத்துடன் உருவாக்கும்.

இந்த விளக்கத்தின் பின்னணியில் ஜெப்னா பேக்கரியில் நேரடி அரசியல் நிகழ்வுகளை பிரதிக்குள் சித்தரிப்பதை விளங்கி கொள்கிறேன். ஆனால் சாட்சியம் இலக்கியத்தின் ஒரு வகை மட்டும் தான். அது வரலாற்றினதும் ஒரு பகுதி. ஆனால் கலையென்பது இரண்டையும் கடந்தது. அதுவொரு சாட்சியமோ வரலாறோ மட்டுமல்ல.

இலக்கியத்துள் அரசியல் 

முதலில் குறிப்பிட்ட மார்க்குவேசின் பிரதியை எடுத்துக்கொண்டால், ஒருவர் தன்னுடைய அம்மாவின் வீட்டினை விற்பதற்காக அம்மாவுடன் தான் வளர்ந்த வீட்டிற்குச் செல்கிறார். அங்குள்ள பால்ய நினைவுகளை நினைவு கூருவதன் வழி கொலம்பிய வாழ்வின் கலாசார, வாழ்வியல் மற்றும் அரசியல் நிலவரங்களை ஒன்றுடன் ஒன்று தழுவியும் பின்னியும் விரிந்தும் செல்லும் கதைகளின் தொகுப்பாக மாற்றுகிறார். ஆனால் அதுவொரு " Raw Material " . ஒரு மூலத் தரவு.மார்குவேஸைப் பொறுத்த மட்டில், அவர் தன் வாழ் நாள் முழுவதும் எழுதியெழுதி வந்தது பெரும்பாலும் ஒரே ஒரு கதையைத் தான். அது அவருடைய சொந்தக் கதை. அதில் அவரொரு கொலம்பியாவின் சாட்சி. அங்கு நிகழ்ந்த எல்லாவற்றுக்குமான ஒரு சாட்சி. படுகொலை - கம்யூனிசம் - காதல்  - பாலியல் என்று வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் இணைத்துப் புரிந்து கொள்ள இடைவிடாமல் எழுதிக்கொண்டிருந்தார்.

அந்தப் பயணம் "தனிமையின் நூறு ஆண்டுகள்" என்ற மகத்தான நாவலுடன் உச்சமடைந்து. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தங்கத்தை மண்ணிலிருத்தெடுத்து அதைக் கழுவிக் கழுவி ஒளியேற்றி அபூர்வமான ஒரு ஞாபகமாக மானுட நினைவில் மாற்றிவிட்டார்.  நூற்றாண்டுகளின் தனிமையில் நேரடி சாட்சியங்கள் மறைபொருளாயின. நேரடி அரசியல் அதன் உடலாகவிருக்கவில்லை. அதன் ஆன்மாவாகமாறிவிட்டது. அது உலகத்தின் காதுகளில் ஒலிக்கும் கொலம்பியாவின் படுகொலைகளையும் அதன் மனிதர்களையும் கொண்டு வந்து நிறுத்தும் கலையின் குரலாகியது. கலைக்கு மட்டும் தான் மானுடம் தழுவிய ஒரே குரலிருக்க முடியும். அது அரசியல் நிகழ்வுகளை புறமொதுக்குவதில்லை. தனது அரசியலை அது உலகத்தின் சகல ஒடுக்குமுறையிலுமிருக்கும் மக்களுக்கும் ஏதோவொரு அளவில் கொண்டு சேர்க்கும்."கதை சொல்வதற்காக வாழ்தல்" என்ற நேரடி சாட்சியின் குரலுக்கும் "தனிமையின் நூறு ஆண்டுகள்" என்ற கனிந்து முதிர்ந்த குரலுக்குமிடையிலான மாற்றம் தான் கலை. ஜெப்னா பேக்கரி, வாசு முருகவேலின் முதற் பிரதி. இதனை நேரடி சாட்சியின் குரலாகவே என்னால் மதிப்பிட முடியும். அதற்குமேல் அதுவொரு நாவலென்றோ குறு நாவலென்றோ என்னால் சொல்ல முடியாது.         

உலகம் முழுவதிலும் இடம்பெற்ற  புரட்சிகளினதும் யுத்தங்களினதும் பின்னர், உடனடியாக நிகழக்கூடிய நிலவரம், சாட்சியங்களை முன்வைப்பது தான். எல்லோருக்கும் சொல்வதற்கு ஏராளம் கதைகளிருந்தன. அவற்றை உடனடியாகப் பதிவு செய்ய நினைத்தார்கள். பெருமளவில் எழுதப்பட்டன. பின்னர் வரலாற்றின் குரல்களாயின. அவை பிறகுருவான கலைஞர்களின் மூலத் தரவுகளாயின.

இதனடிப்படையில், ஈழத்தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்த வரையில் மூலத் தரவுகளைக் கொண்ட பிரதிகளின் காலமாகவே  இந்தக் கால கட்டத்தைப் பார்க்கிறேன். இரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் எழுதப்பட்ட போருக்குப் பின்னரான இலக்கியத்தின் மையமான போக்குகளில் ஒன்றான, யுத்த கால ஞாபகங்களைத் தொகுக்கும் குணா கவியழகன் முதல் தமிழ்க்கவி வரையானவர்களை  மூலத்தரவுகளைப் பகிர்பவர்களாகவே பார்க்கிறேன். சயந்தன், ஷோபா சக்தி போன்ற இறுதி யுத்தத்தின் நேரடி சாட்சியங்களாக அல்லாதவர்களின் பிரதிகளில் தொழில்நுட்பமும் கதைகளின் தொகுப்புகளும் உள்ள அளவுக்கு அவை கலையாக மாறவில்லை. ஆனால் அவற்றிலும் இந்த Raw Material தன்மை உண்டு.

ஆக கதைகளை சொல்வது தான் இப்பொழுதுள்ள மிக முக்கியமான வேலை. அது வரலாற்றில் நம் சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்லும் மானுடப் பேரனுபவங்களின் தொகுப்பு. ஈழத்தமிழர்கள், கடந்த முப்பது வருடத்திற்கும் மேற்பட்ட  தமது வாழ்வில் அனுபவித்தவை ஏராளம். அதுவொரு அரிதான வரலாற்றுக்கு காலம். அதனை எழுத்துக்களிலும் பிற கலைவடிவங்களிலும் நாம் வெளிப்படுத்த வேண்டுமென்பதில் எனக்கு மாற்றுக கருத்துக்களில்லை. ஆனால் அதற்காக இலக்கியத்திற்கான மதிப்பீடுகளை குறைத்துக்கொள்ள முடியாது. ஒன்று கலையில்லை என்றால் அதனை எவ்வளவு நம்ப வைக்க முயன்றாலும் அது முடியாது.

இலக்கிய அரசியல்

இந்தப் பிரதிக்கான முன்னுரைகளில் தொடங்குவது சரியென்று நினைக்கிறேன். ஒன்று லட்சுமி சரவணகுமார் எழுதியிருப்பது. மற்றையது வாசு முருகவேலின் குறிப்பு.

லட்சுமி சரவணகுமாரும் வாசுவும் முன்னுரையில் சொல்லும் விடயங்களை இவ்வாறு புரிந்து கொள்கிறேன்.

* "இந்தியர்களுக்கு இலங்கைப் போரின் வரலாறு குறித்து என்ன தெரியும். ஏன் அவர்களுக்கு அதை எழுத இத்தனை அக்கறை? நாங்கள் அம்மண்ணில் வாழ்ந்தவர்கள். புலிகள் எமக்கு செய்த துரோகங்களை நாம் மட்டுமே அறிவோம். என ஈழப்போராட்டம் குறித்த உரையாடல்களின் உரையாடல்களின் போதெல்லாம் கேட்க முடிகிறது"

" உனக்கென்ன தெரியும் என எம்மை நோக்கி நீங்கள் விரல் எழுப்பும் முன் நீங்கள் எந்த அறத்தின் பக்கமாய் நிற்கிறீர்கள் என உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்"

லட்சுமிக்கு இந்த இடத்தில் ஒரு பதிலும் ஒரு கேள்வியும் உண்டு.

யாரும் தமக்குத் தான் எல்லாம் தெரியுமென்றோ. நீங்கள் எழுதவே கூடாதென்று சொல்லவோ முடியாது. ஆனால் நாசூக்காக, அப்படி இந்த விவாதங்களை செய்பவர்கள் விடுதலைப்புலிகளை நிராகரிப்பவர்களாகவும் அவர்களை துரோகிகள் என்றும் சொல்பவர்களாகவும் மாற்றி விடுகிறீர்கள். அதற்கு அடுத்த சில வரிகளிலேயே, நீங்கள் இப்படி சொல்வதற்கு காரணம் நீங்கள் நிற்கும் அறத்தின் பக்கம் தான் என்று நீங்கள் தியாகியாகிவிடுகிறீர்கள். இந்த தர்க்கத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

சின்னதொரு கேள்வியையும்  கேட்கலாம். முதலில், ஈழத்தமிழர்கள் தமிழக பதிப்பகச் சூழலில் நல்ல மூலதனம். அவர்கள் எழுதியது விற்குதோ இல்லையோ  அவர்களை நன்றாய் விற்க முடியும். ஏற்கனவே உலோகம் என்ற பெயரில் ஜெயமோகன் எழுதிய காவியத்தைப் படித்து நொந்து போயிருக்கிறோம். அரசியல் மேடைகளில் நல்ல பேச்சுத் தலைப்பாய் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கின்ற ஈழத்தமிழர்களில் ஒருவராய் எங்களை நீங்கள் விற்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்பது தான் கேள்வி. நீங்கள் குறிப்பிடுவது போல இந்தியா ஒரு சந்தை தான். நாங்களும் அதில் விற்பனைப் பொருட்கள் என்றால் வரக்கூடிய சாமானிய கோபம் தான் எங்களது. "திலீபன்" என்ற பெயரில் நீங்கள் நாவல் எழுதலாம். யாரும் தடுக்கப்போவதில்லை. ஆனால் திலீபனின் பெயரில் நாவல் வந்தால் அவரை ஒரு சந்தைப்பொருளாக மாற்றுவதையிட்டு நாம் கேள்வி கேட்கக் கூடாதா? அப்படிக் கேட்டால் நானொரு துரோகியென்றால். நல்லது இருக்கட்டும். 

இந்த இடத்தில் வாசுவின் முன்னுரையில் உள்ள ஒரு பகுதியை மேலுள்ள தரவுகளுடன் இணைத்து வாசிக்கக் கோருகிறேன்.

"தற்காப்பு தாக்குதலும் ஆக்கிரமிக்கும் தாக்குதலும் ஒன்றல்ல. தற்காத்துக் கொண்டு போராடுவதன் தன்மை வேறுபட்டது. இது போலவே உள்ளிருந்து பார்ப்போரும் வெளியில் இருந்து வேடிக்கையாக பார்ப்போரும் ஒன்றல்ல. நான் உள்ளிருந்து எழுதினேன். வெளியே இருந்து நிறையவே எழுதப்பட்டுவிட்டது. அது எப்போதும் உண்மைக்கு வெளியேதான் இருக்கிறது." 

* அடுத்தது தனது குறிப்பில் ஒடுக்கப்படும் எழுத்தாளர்கள் என்ற அளவில் ஒரு பட்டியலை முன் வைத்திருக்கிறார்.

தீபச்செல்வனும், குணா கவியழகனும், தமிழ் நதியும், அகர முதல்வனும், வாசு முருகவேலும்... என்ற பட்டியலை முன்வைக்கின்றார். அவர்களுடைய குரல்களை  எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று சொல்லுமவர் இவர்கள் இலக்கிய மதிப்பீட்டில் அழகியல் தரம் சார்ந்து கடுமையாக விமர்சிக்கப்படக் காரணம் அவர்களுடைய அரசியல் நிலைப்பாடாக "தமிழ்த்தேசியம்" இருப்பது தான் என்று நிறுவப்பார்க்கிறார்.

மேலே உள்ள இரண்டு பிரிவுகளான, இலக்கியம் நேரடி அரசியலை பேசுதல் என்பதையும் இலக்கியத்துள் அரசியல் எப்படி இருக்கும் என்பது பற்றியதான எனது மதிப்பீட்டை இரண்டு பிரதிகளினூடாக ஒப்பிட்டிருந்தேன். அதற்கு காரணம், ஒரு பிரதி தான் கொண்டிருக்கின்ற அரசியல் சார்பு நிலையினால் மட்டுமே கலையாக ஆக முடியாது. இந்தப் பட்டியலிலிருக்கும் நண்பர்கள் விமர்சிக்கப்பட்டார்களே தவிர நிராகரிக்கப்படவில்லை என்பதை ஈழத் தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன். 

நாம் மதிப்பீடுகளற்ற சமூகமாக இருக்க முடியாது. அரசியலொரு அளவு கோல் அதனால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று தவறாகச் சொல்வதன் மூலம் அவர்களைத் தவிர சூழலில் இயங்கும் மற்றையவர்கள் "தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள்" என்ற தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. தமிழ்த்தேசியம் என்றால் மே பத்தொன்பதில் முகநூலில் "விளக்குப் படம்" போடுவது என்ற அளவில் உள்ள புரிதலொன்றும் தமிழ்ச் சூழலுக்குப் புதிதல்ல. ஏனென்றல் ஒரு உரையாடலில் நண்பரொருவர் குறிப்பிட்டது போல " தேசியம் என்றால் ஆமியைச் சுடுறது" என்ற புரிதலுடன் தான் பலரும் இன்றிருக்கின்றனர்.

தமிழ்த்தேசியம் தன் விரிந்த அர்த்தத்தில் அனைத்து உரையாடல்களுக்குமான, குறிப்பாக தமிழ்த்தேசியத்திற்குள் உள்ள சிறுபான்மைக் கருத்தியல்களுக்கும் முரண்பட்ட உரையாடல்களுக்குமான அக வெளியையும், பேரினவாத ஒடுக்குதல் நிகழும் போது ஒரே தளத்தில் நின்று தன் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் புற அமைப்பையும் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ்த்தேசியத்தை அறிவார்ந்த தளத்தில் நின்று முன்னெடுக்க முடியும். தனக்குள் உள்ள பிற கருத்தியல்களை நிராகரிக்கும் அல்லது அழிக்க நினைக்கும் போக்கென்பது நபர்களை அழித்தாலோ நிராகரித்தாலோ முடியக்கூடியதொன்றல்ல.

இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும், யார் தமிழ்த்தேசியத்தை குத்தகைக்கு வைத்திருப்பதென்ற அடிபிடிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரப்போவதில்லை. நாம் சிந்திக்க வேண்டியதும் உரையாட வேண்டியதும் எப்படி எந்தத்தளத்தில் சேர்ந்தியங்குவதென்றும், நாம் தொடர்ந்து உரிமை கோரும் தமிழ்த்தேசியமென்பது என்ன. அது வெறும் ஆமியைச் சுடுவதில்லையென்றும். அது ஒரு பேரினவாத அரசுக்கெதிரான சிறுபான்மையொன்றின் விடுதலைக்கருத்தியால் என்றும் தான்.       

இந்தப் பின்னணியில், இவர்கள் ஈழத்தமிழ்ச் சூழலில் புறக்கணிக்கப்படவில்லையென்பதற்கு நானுமொரு சாட்சியென்பதால் இதை பதிவு செய்கிறேன். குணா கவியழகனின் முதலாவது பிரதியான "நஞ்சுண்டகாடு" வெளிவந்த போது அதற்கு முதலாவது கூட்டம், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது. நான் அதில் பேசியிருந்தேன். பின்னர் அந்த உரை கட்டுரையாக தினக்குரலில் வெளிவந்தது. இரண்டாவது புத்தகத்திற்கும் யாழ்ப்பாணம் வாசகர் வட்டத்தின் சார்பில் அப்பொழுதைய அங்கத்தவர்களாக இருந்த நானும் எனது நண்பர்களும் கூட்டம் ஒழுங்குபடுத்தியிருந்தோம். அதிலும் நான் பேசியிருந்தேன். இன்னும் அடுக்கிக்கொண்டே போகாமல், தமிழ்நதியின் பார்த்தீனியம் தொடர்பிலும் ஏனைய கதைகள் தொடர்பிலும் கட்டுரைகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு சூழலில் விவாதிக்கப்பட்டது. தீபச்செல்வன் தொடர்பில் நீண்டகாலமாகவே சிற்றிதழ்களில் கட்டுரைகளில் அவரது பெயர் தவிர்க்கப்பட்டிருக்கவில்லை. அகரமுதல்வன் எழுத ஆரம்பித்தது அவர் மோசமாக நடந்து கொண்ட போது மிகக் கடுமையாக எதிர்வினையாற்றிருக்கிறோம். இதனை லட்சுமி செய்தாரா என்று தெரியாது. செயல் தான் முக்கியமானதென்று நினைக்கிறேன்.  

நிற்க.

இந்தப் பட்டியலில் உள்ள நண்பர்கள் மட்டுமல்லாமல் கீழே உள்ள பண்புகள் பொருந்திப் போகும் எல்லா ஈழத்தமிழ் எழுத்தாளர்களுக்கும் சில விஷயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  

தொடர்ச்சியாகப்  பலரதும் எழுத்துக்கள் தமிழ்நாட்டுச் சிற்றிதழ்கள், பேரிதழ்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலங்கையிலிருந்து வரும் இதழ்களில் இவர்களது எழுத்தாக்களைக் காண்பது அரிது. பதிப்பகங்களும் அப்படித் தான். இவர்களுடைய முதன்மையான வாசகர்கள் தமிழ் நாட்டு மக்கள் தான். ஆக, இவர்கள் யாருக்கு எழுதுகிறார்கள் - எங்கு எழுதுகிறார்கள் - தங்களுடைய மக்களுக்கு அதைக் கொண்டு வந்து சேர்க்க அவர்கள் செய்வது என்ன? வெறும் நாற்பது ஐம்பதோ புத்தகங்களை கொடுப்பது மட்டும் தான் செய்யக்கூடியதா? அதையும் இங்கு காவிக் காவி  விற்கும் இலக்கிய   நண்பர்களினால் மட்டுமே மக்களிடம் சேர்ப்பிக்க முடியும்.

நீங்கள் யாருக்கு எழுதுகிறீர்கள் என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள். அது தான் எங்கு எழுத வேண்டுமென்பதை தீர்மானிக்கும். இங்கும் சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏன் உங்களுடைய முதன்மையான தெரிவாக ஈழத்திலிருந்தோ - புலம்பெயர்ந்தோ வரும் ஈழத்தமிழர்களுடைய சிற்றிதழ்கள் இருக்கக் கூடாது. இவர்கள் தானே உங்கள் மக்கள் இவர்களுக்காகத் தானே நீங்கள் எழுதுகிறீர்கள்.

ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று  சொல்லிக் கொள்ளும் எங்களிடம் சுயாதீனமாக இயங்கக் கூடிய வெகு சில பதிப்பகங்களே உண்டு. அவற்றில் பெரும்பாலானவை இன்று  சேடமிழுத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை உயிர்ப்பித்து உங்களுடைய புத்தகங்களை பதிப்பிக்கும் முதன்மையான இடமாக ஈழம் ஏன் இருக்கக் கூடாது? 

தமிழ் நாட்டு மக்களையோ அல்லது அதன் இலக்கியத்துறையிலுள்ளவர்களையோ தவறானவர்கள் என்றோ மோசமானவர்கள் என்றோ சித்தரிக்கவில்லை. அவர்கள் ஒரு மைய நீரோட்டம் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எந்த ஒரு தமிழ் நாட்டு எழுத்தாளரும் தானே முன்வந்து ஈழத்தில் வருகின்ற ஒரு சிற்றிதழில் எழுதியது நான் அறியாதது. அது  போன்றில்லாமல், சம மரியாதையுடன் நடந்து கொள்ளும் எழுத்தாளர்களும் சில பதிப்பக உரிமையாளர்களும் இல்லாமலில்லை.  ஆனால் பெரும்பாலான இதழ்கள் வழங்கும் வெளியென்பது, கோட்டா முறையில் வழங்கும் சலுகைச் சீட்டுகள் போல, ஈழத்தமிழர்கள் என்ற அடையாளத்துக்கு வழங்கப்படும் இடம். நமக்குத் தேவை சுயமரியாதையுள்ள அங்கீகாரமே தவிர அனுதாப அங்கீகாரமல்ல.

நீங்கள் தீர்மானிக்க வேண்டியது, யாருக்குக் கதை சொல்ல வேண்டுமோ அவர்களுக்குச் சொல்லுவது. முதலில் அதை அவர்களுக்குக்  கிடைக்கச் செய்யுங்கள்.தமிழ் நாட்டு வாசகர்கள் எங்களுடைய கதையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் எங்கள் புத்தகங்களை எங்கள் பதிப்புகளை எங்கள் சிற்றிதழ்களை வாங்கிப் படிக்கட்டும். எங்கள் கதையை நாங்கள் படிப்பதற்கு தமிழ் நாட்டிலிருந்தொரு பதிப்புத் தேவையில்லை. நாம் சுயாதீனமாக இயங்கும் தனித்த அடையாளமுள்ள மக்கள்.

கிரிஷாந்


(28 . 01 . 2018 இல் 'ஊறுகாய்' அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஜெப்னா பேக்கரி அறிமுக நிகழ்வில் வாசித்த உரை)

திங்கள், 22 ஜனவரி, 2018

இலக்கியம் எனும் இயக்கம்

இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக இருப்பர். 2012  ஆம் ஆண்டு நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் வேலணையூர் தாஸ் முகநூல் ஊடாக சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் படித்த பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் தான் அவரது வீடிருந்தது. பின் பல காலம் பிள்ளைகளின் படிப்பிற்காக அந்த இடத்திலேயே சுற்றிச் சுற்றி வாடகை வீடுகளில் தாங்கினார். ஒரு சித்தாயுர்வேத வைத்தியர். சரியென்று, ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிய  அவரைச் சந்திக்கச் சென்றேன். "நீங்கள் கவிதை எழுதிறத்தை பார்த்தனான்... என்று ஆரம்பித்து கன விஷயங்களைக் கதைத்து. நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு அமைப்பா இயங்குவம்" என்று சொன்னார். நானும் ஒத்துக்கொண்டு அதற்குப் பின் நடந்த கூட்டமொன்றிற்குப் போனேன். அங்கு இளம் தலைமுறையில் எழுதிக்கொண்டிருந்த சிலரும் மூத்த தலைமுறையினர் சிலரும் வந்திருக்க புத்தக அறிமுகம், கவிதை வாசிப்பு என்று போய்க்கொண்டிருந்தது. நான் பேசிய முதல் இலக்கியக் கூட்டங்களை அந்த அமைப்புத் தான் ஏற்பாடு செய்தது. பின் அடுத்த மூன்று வருடங்கள்  யுத்தத்திற்குப் பிறகான ஒரு தலைமுறை இலக்கிய இடைவெளியைத் தொடுத்த அமைப்பாக வேலணையூர் தாஸ் முழுமூச்சாக நின்று உருவாக்கிய யாழ் இலக்கியக் குவியம் இயங்கியது. ஏராளமான கலந்துரையாடால்கள், இலக்கிய வெளியீடுகள், புத்தக அறிமுகங்கள் என்று நீண்டதொரு இலக்கிய செயல்பாட்டை நெருக்கடியான காலகட்டத்தில் இலக்கியக் குவியம் ஆற்றியது.அந்தக் கால கட்டமென்பது மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலம். பெரும்பாலான கூட்டங்களிற்கு அரச புலனாய்வுத்துறை வந்திருக்கும். இருந்தும் தொடர்ச்சியாக இயங்கி வந்தோம். 2015 அளவில் எங்களுக்குள் முரண்பாடுகள் வந்து இளமை வேகத்தில் அமைப்பை விட்டு சில நண்பர்கள் விலகினோம்.

இலக்கியக் குவியமென்பதை ஒரு அமைப்பாகவும் தாஸ் என்ற தனிமனிதரை அதன் மைய இயங்கு விசையாகவும் பார்த்தால், ஈழத்தமிழ்ப்பரப்பில் இன்று ஏற்பட்டிருக்கும் இலக்கிய மற்றும் அறிவுத்துறை சார்ந்த செயல்பாடுகளில் ஒரு தலைமுறையினரை இணைத்தமை தொடர்பில் அமைப்புக்கும் தாசிற்கும் பெரும்பங்குண்டு. அது ஒரு வரலாற்றுப் பாத்திரம்.

வேலணையூர் தாஸ் 


அண்மையில் லெ. முருகபூபதி பற்றி எஸ். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய "ரஸஞானி" ஆவணப்படத்தை நிகழ்படத்தில் திரையிட்டிருந்தார்கள். அதன் மைய இழையாக, முருகபூபதியின் பங்களிப்பாக நான் பார்த்தது ஒரு இயக்கமாக தனிமனிதர் இயங்குவதும் அதனூடாக ஒரு சூழலின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைப்பதும்.

ஜே கே அந்த ஆவணப்படத்தில் முருகபூபதியைப் பற்றிச் சொல்லுமொரு  படிமம் வழிகாட்டிமரமென்பது. வழிகாட்டி மரத்தை கடந்து செல்பவர்களுண்டு. அதன் நிழலிலமர்ப்பவர்களுண்டு. அதனைச் சொறிபவர்களுமுண்டு. என்று அவரின் பாத்திரத்தை அவரின் வார்த்தைகளிலிருந்தே சொல்லியிருந்தார். அதுவொரு முக்கிய அவதானிப்பு.

எங்களுக்கு முந்தைய தலைமுறையில் இவ்வாறு தனிமனித இயக்கமாக இயங்கியவர், இயங்குபவர் அ. யேசுராசா.

எல்லோருடைய பங்களிப்பையும் மதித்தும் மதிப்பிடடுமே அடுத்த தலைமுறை நகர முடியும். நான் குறிப்பிட்டது சிலரையே. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஊரிலும் இப்படி மனிதர்களுண்டு. அவர்கள் தான் அந்தச் சூழலை அடுத்த தலைமுறைகளுக்கு கையளிப்பவர்கள்.

முருகபூபதியின் ஆவணப்படம் குறித்து சில அவதானிப்புகள்.

லெ. முருகபூபதி 


ஒன்று, ஈழத்தமிழர்கள் ஆவணப்படங்கள் உருவாக்கம் சார்ந்து மிகவும் குறைவான புரிதலுள்ள சமூகம். வெகு சிலரே அதில் இயங்கிவருகிறார்கள். அதே நேரம் நிதிவசதிகளும் குறைவு. மேலும் காமெராவுக்கு முன் நெளியும் ஈழத்தமிழர்களைப் பார்க்கும் போது சின்ன வயதில் முதல்முறையாக மேடையில் நின்று மலங்க மலங்க விழித்து, பேச்சுப் போட்டிக்கு பேசுபவர்கள் போலேயே உடல்மொழியை வைத்திருப்பார்கள். இயல்பாக கதைக்கவோ தங்களை வெளிப்படுத்தவோ  முடிவதில்லை. இந்தப் பின்னணிகளை விளங்கிக் கொண்டு தான் ஆவணப்படத்தினைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.

ஆவணப்படத்தின் மிக முக்கியமான விடயம், எஸ். கிருஷ்ணமூர்த்தி  எடுத்துக்கொண்ட திசை. ஆளுமைகளை ஆவணப்படுத்தலென்பது மிக முக்கியமான புள்ளி. அந்தக் கரிசனைக்கு அவருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். அதே போல் அவுஸ்திரேலியச் சூழலில் உள்ள குறைபாடுகளுடன் ஒருவருடம் உழைத்து ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியமையும் கவனிக்கப்படவேண்டியது.

மேலும் படத்தில் முக்கியமான கதை சொல்லிகள், முருகபூபதி, அவரது மனைவி, கௌசி, ஜே கே போன்றவர்கள் தான். அதற்கு அவர்களது இயல்பும் ஒரு காரணம். குறிப்பாக முருகபூபதியின்  மனைவி ஒரு கட் அண்ட் ரைட்டான ஆசிரியராக தனது கணவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார். அவர் ஒரு ரோபோ மனிதர். எப்ப பார்த்தாலும் போனில் ஒரே இலக்கியம். எனக்கு அதைக் கேட்க சில நேரங்களில் சலிப்பாக இருக்கும். அவரது பெரிய பலவீனம் எழுத்துப்பிழை என்று.முருகபூபதியின் வாழ்க்கையை ஒரு சின்னக் கணத்திற்குள் படமாக விரியவைத்துக் கதை சொல்லும் தன்மை முக்கியமானது.

பெரும்பாலானவர்கள் சலிப்பூட்டும் மேடைப் பேச்சை நிகழ்த்துகிறார்கள். இன்னும் கொஞ்சம் சில முன்னாயத்தங்களைச் செய்திருக்கலாம். இன்னுமொன்று, சங்கங்கள், கழகங்கள் அதன் தலைவர்கள் என்று அலைந்திருக்காமல் முருகபூபதியின் வாசகர்கள் அல்லது அவருக்கு நெருக்கமான நண்பர்களுக்குள்ளால் கதையை விரித்திருந்தால் முருகபூபதியைப் பற்றிய முழுமையான சுயசித்திரமொன்று கிடைத்திருக்கும். 

எஸ். கிருஷ்ணமூர்த்தி

மற்றது முருகபூபதியை படமாக்கியிருக்கும் விதம். முதலாவது புரிதல், ஒரு கலைஞன் அல்லது எழுத்தாளர் எப்பொழுது தன்னை இயல்பாக வெளிப்படுத்துவார் என்பதை தெரிந்து கொண்டு அதன் பின்னால் கமெரா நகர்ந்திருக்க வேண்டும். கமெரா அவரை இயக்கியிருக்கக் கூடாது. அதில் ஒரு இயல்பு இருந்திருக்கும், ஒரு சுதந்திரம், அப்பொழுது  காமெராவுக்குப் பின்னாலிருக்கும் கண்களை மறந்து அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்க முடியும்.


இறுதியாக, தொழிநுட்பம் சார்ந்தும் உள்ள குறைபாடுகளையும் கவனத்திலெடுத்தாலும் கூட. இதுவொரு முக்கியமான முயற்சியே. இலக்கியத்தினையும் அதன் இயக்கத்தினையும் நகர்த்தும் மனிதர்களிலொருவராக முருகபூபதியை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் செயலுக்கு வாழ்த்துக்கள்.      

புதன், 11 அக்டோபர், 2017

மூளையின் நெசவுத் தொழிற்சாலை

நான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து  ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் எல்லாக் கலைவடிவங்களுக்குமிருக்கும் வேலை தான். கூவிக் கூவிப்  பிரச்சாரம் செய்வது, மண்டையை உடைத்தால் தான் திறக்கமுடியும் என்பது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குவது போன்று இன்னுமின்னும் பல வேலைகள் உண்டு. அதெல்லாம் தேவையான வேலை தான். இருந்தாலும் கவிதை,  போதை மயக்கமாய் மட்டுமே நிகழ வேண்டியது. அது வெறுங் காலையில்  தானே மலரும் சிரிப்பாகவிருக்கும். இல்லை,  துயரத்தின் படிக்கட்டருகே புகைந்து மிதக்கும் முகங்களாயுமிருக்கும்.  எல்லாக் கலைவடிவங்களையும் போல மனிதர் கொண்டாட  நிகழ்ந்தது தான் இந்த மொழியின் கொண்டாட்டமும்.  ஆகாவே கவிதை  போதையாயிருக்கிறது.
ஏதோவொரு திருப்பத்தில் நின்று பிளேன் - டீ குடித்தபடி சுகுமாரன் கையைக் காட்டி மச்சான்,

"சொல்லித் தந்ததோ
கற்றுக் கொண்டதோ போல இல்லை
வாழ்க்கை - அது
குழந்தைக் கதையில் மந்திரவாதி எங்கோ ஒளித்து வைத்த
உயிர்"

என்று சொல்லிவிட்டு புன்னகைக்கிறார். நான் உடனே, என்ன மச்சான் செய்வது? இந்த வாழ்க்கை நம்முன் கற்களால் எழும்புகிறது. அதனாலென்ன ஆழக் கிணற்றின் அடியாழத்தில் நமக்குள் தானே கதவுகளில்லை என்றேன். போடா விசரா,

"இப்போது அன்பு -
ஊதாரிப் பிள்ளை வீடு திரும்பக் காத்திருக்கும்
கருணையோ
சாகாதபிடிகடுகுக்காய் நடந்த
ஆற்றாமையோ
தொட்டில் இல்லாமல் வந்த குழந்தைக்கு
சவப்பெட்டி வாங்கக் காசில்லாத
தவிப்போ அல்ல "

இப்போது அன்பு -
சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனை "

என்றார். அடப்போடா பிளேன்டீயை கையில் வைத்தபடியே பீடியொன்றை எடுத்து பற்ற வைத்தேன். வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஹமீதிடம் உங்களின் கால்களின் ஆல்பம் படித்தேன். உருக்கமாக இருந்தது, ஆனால் கொஞ்சம் நீண்டு விட்டது என்றேன். கவிதையிலிருந்ததை  விடவும் அதிகமான கால்களை நான் பார்த்திருக்கிறேன். நான் எப்பொழுதும் கால்களையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே கொஞ்சம் நீண்டு விட்டது. அதனாலென்ன இப்போது, நமக்குத் தான் இன்னும் நேரமிருக்கிறதே என்றார். சரி மச்சான் நீங்கள் கதைச்சுக்கொண்டிருங்கோ, எங்கட ஊர்ப் பெடியன் ஒருத்தன் நிக்கிறான். அவன் தவறணைக்குப் போயிருப்பான் கூட்டிக்கொண்டு வாறன்  என்று சொல்லிவிட்டுப் போனான். கவிதை எழுதிய தொண்னூறு வீதம் பேர் அங்கிருந்து குடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் முகத்தில் இன்னொருவர் ஓங்கிக்குத்துவார். இரத்தம் வழியும், உதாரணத்திற்கு, கணியன் பூங்குன்றனார் கள்ளுக்குடித்துக்கொண்டிருந்த அவ்வையாரின் முகத்தில் குத்திவிடுவார். மனுஷியை நிப்பாட்டேலாது. பிறகு  அன்னா அக்மதேவா ஒருபக்கம் நிண்டு இழுக்க இன்னொரு பக்கம் பாரதி மச்சான் இழுத்துக்கொண்டு நிற்பான். இதற்கிடையில் நட்சத்திரன் செவ்விந்தியனின் நாஸ்டால்ஜியாப் படகில் எல்லோரும் வந்து நாம் முன்னரிருந்த ஆற்றங்கரையில் புற்களுக்கும் காய்ந்த இலைகளுக்கும் உதிர்ந்த மலர்களுக்கும் மேலே உருண்டு புரண்டு சிரிப்பார்கள்.         

"பகலில்,
ஒரு பீடி இழுக்கிறதைப் போல
எல்லாம் செய்யலாம் போலுள்ளது" என்று நட்சத்திரன் சொன்னான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

பிறகு எங்கிருந்தோ வந்த ஆண்டாளும் இணைந்து கொண்டாள். ஆண்டாளுக்கு குடிப்பழக்கம் இல்லை. கண்ணன் தான் போதையே. காதலும் காமமும் ஏற ஏற மொழியைக் குழைத்து மாலை நேரத்துக்கான போதையை அவள் செய்வாள்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

நாங்கள் கிறங்கிக் கேட்டுவிட்டு பாரதியைப் பார்த்தோம். பேயா, இங்க பார் அவள் எப்பிடி எழுதியிருக்கிறாள் என்று. நீயும் எழுதியிருக்கிறியே. எங்க ஒண்டு சொல்லு பார்ப்பம் என்றோம்.

உடனே மெல்லக் கம்மிவிட்டு பாடத் தொடங்கினான். திறமான பாட்டுக்காரன்.

"ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ"

அடேய் வரியில கொஞ்சமும் அந்த சங்கீதத்தில் மிச்சமும் இருக்கு, ஆனா இது அவ்வளவு தேறாது என்றேன். போடா லூசா உனக்கு எல்லாம் இப்பிடித்தான் என்று கெக்கட்டம் போட்டுச் சிரிச்சான். உடனே ஹமீது சொன்னான்,

'
வேறொன்றும் வேண்டியதில்லை

கொஞ்சம் சோறு
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் தைரியம்

வேறொன்றும் வேண்டியதில்லை

இவர்களிடமெல்லாம்
எதையும் நிரூபிக்காமல்
முழுப் பைத்தியமாக வாழலாம் "

மச்சான், இவங்களுக்கு சொல்லிச் சொல்லி மாளாது நாங்கள் கொஞ்சம் நடந்துவிட்டு வருவமா என்று பாரதியைக் கேட்டான். சரி மச்சான் போவம் என்று ஹமீதின் வண்டியைத் தள்ளியபடி பாரதி போனான். பின்னேரத்துக்கும் இரவுக்குமிடையில் நட்சத்திரங்கள் தெரியத் தொடங்கின.

போனார்கள் இரவுணவுக்குத் திருப்பினார்கள். நானும் கணியனும் நாச்சியாரும் சேர்ந்து விறகுகளை எடுத்து வந்து அடுக்கினோம். பட்டினத்தார் போய் தீப்பெட்டியெடுத்துக்கொண்டு வந்து கொழுத்தினார். தீ மூண்டெரிந்தது. காட்டுக்குப் பக்கமாயிருந்த குடிசைகள் என்பதால் கொஞ்சம் குளிர் கூட. நடுங்கிக் கொண்டிருந்த தீச் சுடர் போல் கண்களெரிய பாரதி கஞ்சா புகைத்துக்கொண்டிருந்தான். புகை, சுற்றி மிதந்து இடமெங்கும் போதை இருட்டைப்போல ஆகியது. எனக்குத்தெரிந்து போதைக்கெதிரான கவிஞர்கள் இந்த மானுடவரலாற்றிலேயே கிடையாது என்று தான் நினைக்கிறேன்.

நித்திய போதை, அதுவொன்று தான் எங்களை வாழ வைக்கிறதென்று நம்பினோம்.

எங்கேயோ போன எஸ் போஸ் கோபமாக திரும்பி வந்திருந்தான். கவிதையெழுதும் கொப்பியைத் தூக்கிப் போட்டான். இவங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்குதில்லை மச்சான். சாத்தானுக்கும் தேவனுக்கும் வித்தியாசம் தெரியாமல் நிக்கிறாங்கள், என்று கத்தினான். புகையை நன்றாக உள்ளே இழுத்து தொண்டையில் மெல்லிய நோவுடன் புகை போவதை ரசித்துக்கொண்டு திரும்பிய பாரதி. நீ என்ன மச்சான் சொல்லுறாய் நானும் இவங்கள நம்பித்தான் பத்தாயிரம் புத்தகம் அடிச்சு வெளியிடலாம் என்று நினைச்சன். கடைசி வரைக்கும் சோத்துக்கு வழியில்லாமல் அலைஞ்சது தான் மிச்சம் என்று கஞ்சா அடித்த ஆத்தலில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பாரதி உளற ஆரம்பித்தான்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருளின் உலகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இருட்டில் ஆடும் மரங்கள். மிதந்து செல்லும் ஆறு. அலைகளின் வெண் வரி. சிறிது நேரத்தின் பின்  ரமேஷ் - பிரேம் நிற்க, அழுதுகொண்டிருந்த பாரதி, மெல்லிய இடைவெளிவிட்டு," திரும்பச் சொல்லுங்க டா அந்த வரிகளை" என்றான்.

உன்னைக் கொல்ல
எனக்குப் பல வழிகள் தெரியும்
இருந்தாலும் எனக்குப்
பிடித்த வழி
உன் முன்னே என்னைப்
பிணமாகக் கிடத்துவது.””

*

கையில் பிளேன் டீ க்ளாஸ்களைக் கொண்டு மாணிக்கவாசகர்  வந்தான். மச்சான் இரு இரு என்று கையைப்பிடித்து இழுத்த கம்பன், மச்சான் அந்த பாட்ட ஒருக்கா சொல்லிக்காட்டடா என்றான். உனக்கு இதே வேலையாய் போச்சு என்று சலித்தபடியே  பிளேன்டீயை கொடுத்தபடி சொல்லத் தொடங்கினான் மாணிக்கம்,

"முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதனென்(று) அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்"

... என்ற படி போனான். எங்கேயோ சுற்றிக்கொண்டிருந்த விக்கிரமாதித்யனும் தேவதேவனும் வந்து சேர்ந்தார்கள்.

தேவதேவன் கண்கள் புன்னகைக்க எல்லாவற்றையும் பற்றி உருகிக்கொண்டிருந்தான். பிறகு அந்தப் பறந்து போகாத இரண்டு வண்டுகளை பற்றி கதைத்தான். அதை ஏதோ A ஜோக் கேட்டது போன்று யாரோ சிரிக்கத் தொடங்கினார்கள். பிறகு விக்கிரமாதித்தியனை தனியே ரோட்டில் விட்டுவிடு போவதற்கு தான் பயந்ததை பற்றிச் சொன்னான். நிறை வெறியிலிருந்தரை கூட்டி வர குமரகுருபரனையும் இன்னும் சில இளம் கவிஞர்களையும் கூட்டி வர போவதற்கு முன் தான் இது நடந்திருக்கிறது.

அந்தக் கவிதையைச் சொன்னான்.

ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்

கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே

ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்

*

இப்படியேன் உளறிக்கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்றால், இந்தப் பைத்தியக்காரர்கள் எழுதுவதைத் தான் நான் கவிதையென்று உணர்கிறேன். இன்னும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரையும் வைத்து எழுதுவது கஷ்டமாகவிருக்கிறது. நீண்டுவிடும் ஆகவே இனி எழுத ஆரம்பித்த நோக்கத்தைப் பார்ப்போம்.

இமாம் அதனானையும் மச்சான் என்று தான் கூப்பிடுவேன். அவன் கவிதைப் புத்தகம் எழுதியிருக்கிறான். எல்லாமே ஒரு சின்ன ஐடியாவை வைத்து செய்திருக்கும் வேறு வேறு பிரதிகள். பிரதிக்குள்  கருத்தியல் எல்லாம் நன்றாகவிருக்கிறது ஆனால்  கவிதை என்று நான் வாசிப்பது கொடுக்கும், அனுபவங்களுக்கும் போதைக்கும் நெருங்கக் கூட முடியாத வித்தியாசமான வெளியில் நிற்கிறது அவன் எழுதுபவை.என்ன செய்ய, நான் வாழும் உலகத்தைத் தான் மேலே சொல்லியிருக்கிறேனே, யோசித்துப் பாருங்கள் நாங்கள் யாருக்கெல்லாம் பிறகு தோன்றியிருக்கிறோம். நமது மச்சான்களும் மச்சிகளும் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின் நாம் எழுதுவதென்றால் அவர்களைத் தாண்டி எழுதுவதென்றே நினைக்கிறேன். பாரதி மச்சானுக்கும் ஆண்டாள் மச்சிக்கும் இருந்த பிரச்சினை வேறு. நமது வேறு. ஆனால் கலையின் உணர்வு ஆழமானது தானே. அதனை எந்த வரிகளாலும் கொண்டு வர முடியவில்லை என்பது தான் மொழியின் மீது சத்தியமாக என்ற தொகுப்பின் மீதான எனது வாசிப்பு. 

மோக்லி பதிப்பகம் புத்தகத்தைக் கொன்று சடலத்தை விற்பனைக்கு வைத்திருக்கிறது. கவிதைகளில் எண்பது வீதமானவற்றில் ஏராளமான எழுத்துப்பிழைகள். கொஞ்சம் கூட அக்கறையில்லாத வடிவமைப்பு.

சரி, மச்சான்களும் மச்சிகளும் அழைக்கிறார்கள், நகரும் படகில்  செல்கிறேன். எனக்கு மூளையால் நெசவு செய்யும் கவிதைகளை ரசிக்கத் தெரியவில்லை. சடங்கில் தெறிக்கும் மந்திர உச்சாடனத்தை எழுதும் பைத்திய ஆவிகளுடன் தான் நான் வாழப்போகிறேன். என் டி ராஜ்குமார் மச்சான் வார்த்தைகளில் சொல்வதானால், " ஓதி எறிந்த சொற்களில்".

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

ஆழத்தில் மலர்ந்த தாமரைகள்

மாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அதிவேகப் பாடல்களால் உடம்பை நிறைத்தபடி ஏறக்குறைய முப்பத்தைந்து நிமிடத்தில் சாவகச்சேரி வந்தோம் நானும் மதுரனும். புதன், 13 செப்டம்பர், 2017

அருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல
கோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களுக்கு இங்கு என்ன நடக்கிறதென்றாவது தெரியுமா? இலங்கையில் நின்று கொண்டு அதன் ஜனாதிபதியிடம் தனக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு விட்டதென்று புலம்பியிருக்கும் இந்த முதுகெலும்பில்லாத போலி, அவரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கிறார்.

சாதாரண மக்கள் ஜனாதிபதியைச் சந்திக்க நூறு நாளாவது தெருவில் குந்தியிருக்க வேண்டியிருக்கிறது, அதுவும் கூட நடப்பது அசாத்தியம். இங்கு எதற்கும் வக்கில்லாமல் இந்த மக்களின் துயரங்களுக்கும் இழப்புகளுக்கும் நீதி கேட்டு எழுத்தாளர்கள்  எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்ட அப்பாவி,  மைத்திரி பால சிரிசேனாவை ஜாலியாக சந்தித்து புத்தக கையளிப்பை நிகழ்த்தியிருக்கிறார். வாவ். இந்த நாட்டில் யாரின் கருத்து சுதந்திரத்தை யார் பாதுகாப்பது.

அருளினியனின் புத்தகத்திற்கெதிரான மிரட்டல்கள் கண்டிக்கப் பட வேண்டியது. ஆனால் அதனை அருளினியனே நியாயப்படுத்திவிட்டு சிரித்துக்கொண்டிருக்கிறார். தயவு செய்து இதுபோன்ற போலிகளை எழுத்தாளர்கள் என்று அடைப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அருளினியன், நீங்கள் சமர்ப்பணம் செய்திருப்பது போராளிகளுக்கு - சந்தித்து சிரிப்பது கொலைகாரர்களுடன், உங்களுக்கு ஏதாவது தகுதியிருக்கிறதென்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு நடந்த மிரட்டல்களைப் பற்றியும் அதற்கு எதிரான எனது கருத்துக்களையும் அண்மையில் நிகழ்ந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியிருந்தேன். ஆகவே இப்பொழுது உங்களின் கருத்துக்களுக்கெதிராகவும் பேசவேண்டியிருக்கிறது. இலங்கை ஒன்றும் அவ்வளவு ஜனநாயக நாடல்ல. மைத்திரி கருத்துசுதந்திரத்தை காப்பாற்றும் ' ஐயாவும்' அல்ல. நீங்கள் அவரை சந்தியுங்கள் புத்தகத்தை வெளியிடுங்கள் அது உங்களின் இஷ்டம். ஆனால் கருத்து சுதந்திரம் தேவை என்று நாங்கள் இங்கே தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருப்பது அதிகாரத்தின் வேட்டிக்குள் நின்றுகொண்டு எழுத்துவதற்கல்ல. இங்கு சாதியும் மதமும் பிரச்சினை தான், ஆனால் அதற்கெதிரான எங்களின் குரலென்பதை இதுவரை பாதுகாப்பது எங்களின் எழுத்துக்களே, அதற்காக தாக்கப்பட்டாலும் கூட அப்பம் சாப்பிட அலரிமாளிகைக்குச் செல்ல மாட்டோம். நீங்கள் செய்திருப்பது கருத்துக் சுதந்திரம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் குரலுக்காகவல்ல.

நீங்கள் செய்துகொண்டிருப்பதற்குப் பெயர் பொறுக்கித்தனம்.