செவ்வாய், 25 அக்டோபர், 2016

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?






( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம் , தயார்ப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டும் . இப்பொழுது கூட அவற்றை திருத்த முடியும் . அவற்றை ஆராய்வதற்காகவே இங்குள்ள நிலவரங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன.)

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான சுலக்சனை புரிந்து கொள்ள சில நிகழ்வுகள்

*  சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதத்தில் அவர்  பங்கேற்றிருந்தார்.சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தில் பல்கலைக் கழகத்தின் பிற பீடங்கள் பங்கு பற்றாத போது மருத்துவ பீடம்  பங்குபற்றியது. அவர் தனது கலைப் பீடத்தை மீறித் தான் அந்த போராட்டத்தில் பங்கு பற்றினார். அப்பொழுது அவர் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தார்.

* பின்னர் "ராகிங்"இல்  உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நான் எழுதியும் இயங்கியும் வந்த காலத்தில் அவரையும் அவரது நண்பர்களையும் சந்தித்து உரையாடினேன். "ராகிங் தவறான ஒரு விஷயம் . ஏனென்றால் இவர்களுக்கு ராகிங் செய்யத் தெரியாது. நல்ல வகையில்  ராகிங் செய்யலாம் " என்றார். "கத்தியை வைத்து வெங்காயமும் வெட்டலாம் , ஆளையும் வெட்டலாம் " நீ சரியானதாக செய்யும் நடைமுறையொன்று தொடர்ந்து கைமாறும் போது ஆபத்தானதாக மாறும் என்றேன். சிரித்து விட்டு சென்றார்.

 * சமீபத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டுவதற்கு சில வாரங்கள் முன்னர் தான் தனது ஜுனியர் மாணவர்களை அடித்த செயலுக்காக தண்டனைக் காலம் முடிந்து திரும்பியிருந்தார்.( இதனை நான் ஒரு குற்றமாகச் சொல்லவில்லை. இது அவரின் குற்றமில்லை . இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பல்கலைக் கழகம்  எவ்வித கூச்சமுமில்லாமல் செய்துகொண்டுதானிருக்கிறது , அது இவரை விட அவை சரியென்று வாதாடும் கும்பல்களையே சேரும் பழி.)

* அவருக்கு அரசியலில், சமூக செயற்பாடுகளில் பொதுவான பல்கலைக் கழக மாணவர்களை விட ஈடுபாடு அதிகம் , கடந்த தேர்தல் காலத்தில் ஒரு கட்சி சார்ப்பில் எங்கள் ஊர்ப்பக்கம் இவர் பிரச்சாரம் செய்து கொண்டு வந்தார். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த  இவரிடம் நண்பரொருவர் " உனக்கெதுக்கடா இந்த விசர் வேலைகள் , இவங்களுக்கு வால் பிடிச்சுக் கொண்டு திரியிற " என்று சொன்னார். அவர் வழமை போல்  சிரித்து விட்டு , பம்பல் அடித்து விட்டு சென்றார்.



இதையெல்லாம் அவரின் படுகொலை தொடர்பில் வைக்கப் படும் பிற அவரது நல்ல நினைவுகள் தொடர்பான சாட்சியமாக முன் வைக்க விரும்பவில்லை. பல்கலைக் கழகம் இது போன்ற படுகொலைகளை , அடக்குமுறைகளை கையாளும் தகுதி பெற்றுவிட்டதா? அதன் பொருட்டு சிந்திக்கவும் செயற்படவும் தயாராகி விட்டதா ? என்பதை உரையாடவே இவரது முரண்பட்ட அம்சங்களை விவரித்தேன்.
பல்கலைக் கழகத்தின் மீது தொடர்ந்தும் வைக்கப் படும் விமர்சனங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பல்கலைக்கழக நண்பர்கள் தம்மிடமிருக்கும் பொறுப்புக்களும் எதிர்பார்ப்பும் எவ்வளவு அதிகம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு இதே படுகொலையை யாரவது சாதாரண இரண்டு இளைஞர்கள் மேல் நடத்தப்பட்டிருந்தால்  நாடு இவ்வளவு கலங்கியிருக்குமா ? எழுந்திருக்குமா ? எதிர்த்திருக்குமா ?

பதில் " இல்லையென்று " தான் வந்திருக்கும் .  அடையாள ஈர்ப்புக்கள் இடம்பெற்றிருக்கும் . ஆனால் இவ்வளவு துயரம் இவ்வளவு எதிர்ப்பு நிகழ்ந்திருக்காது . இது ஏன் ?

ஏனென்றால் இந்த சமூகத்திற்கு அவ்வளவு தூரம் நீங்கள் முக்கியமானவர்கள் .. விலைமதிப்பற்றவர்கள் . உங்கள் ஒவ்வொருவரையும் அவ்வளவு நம்புகிறது இந்தச் சமூகம் அவ்வளவு மதிக்கிறது. அதன் வெளிப்பாட்டைத் தான் கடந்த தினங்களில் நாம் பார்த்தோம்.

சரி , இப்படிப் பட்ட மதிப்பையும் நம்பிக்கையும் உங்கள் மீது கொண்டிருக்கும் சமூகத்திற்கு பல்கலைக் கழகம் யுத்தத்திற்குப் பின்  செய்தது என்ன ? அனர்த்த நிவாரணங்கள் , சில பெரும் பிரச்சினைகளில் கவனயீர்ப்பு , கண்டனம்.

 மலையக தொழிலாளர் தொடர்பில் செய்தது எல்லாம் தமிழ் சினிமாவில் இறுதிக் காட்சியில் வரும் பொலிஸ் போன்ற காட்சி . இவை தானா உங்களால் முடிந்தது . இதற்காகத் தானா சமூகம் இவ்வளவு நம்பிக்கையை உங்கள் மேல் வைத்திருக்கிறது . இல்லை . இல்லவே இல்லை .

நீங்கள் அவர்களை வழிநடத்த வேண்டியவர்கள். நீங்கள் அவர்களின் பிரச்சினைகளை ஆராய வேண்டியவர்கள் . நீங்கள் அவர்களின் பொருட்டு யாரையும் எதிர்த்து போராட வேண்டியவர்கள் ,சுலக்சனைப் போல. அவர் தனது பல்கலைக் கழகத்தை எதிர்த்து தான் போராட்டத்திற்கு வந்தார்.

இதை நாம் எவ்வளவு தூரம் செய்கிறோம் என்பதை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் , அசைன்மென்ட் செய்வதற்கும் , ராகிங் செய்வதற்கும் , மற்ற எல்லாம் செய்வதற்கும் எமக்கிருக்கும் நேரம் நம்மை நம்பும் சமூகத்திற்காக செலவளிக்க இருக்கிறதா ? சுலக்சனிடம்  இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று தான் என்று எனக்குத் தோன்றுகிறது. தான் நம்புவதற்க்காக உண்மையில் களத்தில் நிற்பது . அப்படித் தான் அவர் பிரச்சாரம் செய்ததையும் வீதி நாடகங்கள் போட்டு மக்களை மகிழ்வித்ததையும் பல்வேறு போராட்டங்களில் பங்கு பற்றியதையும் பார்க்கிறேன்.

நாம் செய்யும் ஆய்வுகளில் எத்தனை சமூகத்திற்கு பயன்படுகிறது. நம்மிடமிருக்கும் சட்டத்துறை எவ்வளவு தூரம் சட்டம் பற்றிய அறிவை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது . நமது சமூகவியல் துறை ? வரலாறுத் துறை  ?




எவ்வளவு தூரம் மக்களை அறிவு மயப்படுத்தியிருக்கிறோம் ? எவ்வளவு நேரம் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாடியிருக்கிறோம் . அனைத்து பீட மாணவர்களும் ( வெறும் வகுப்பு பிரதிநிதிகளோ , தலைவர்களோ மட்டுமல்ல ) ஒன்றாக இருந்து பொதுப்பிரச்சினைகளை ஆராய்ந்து பொது முடிவுகளையும் பொது வேலைத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்  ?

அதிகம் வேண்டாம் . நாங்கள் படிக்கின்ற கல்வி முறையிலிருந்து பொருளாதாரம் வரை திட்டமிட்டு இனஒடுக்குதல்  நடந்து கொண்டிருக்கின்ற போது எந்தத் திட்டமிடலும் எந்த முன்னாயத்தமுமின்றி வெறும் கோஷங்களால் இவற்றை எதிர்த்துவிட முடியும் மாற்றிவிட  முடியும் என்று எதிர்பார்கிறீர்களா ? இல்லவே இல்லை .

உதாரணத்திற்கு இந்த வாள்வெட்டு கும்பலின் வருகை தொடர்பில் சமூகமட்ட ஆய்வு என்ன ? இதற்கு அளிக்கப் பட்ட  விசேட பொலிஸ் அதிகாரம் தொடர்பான சட்ட வரையறைகள் என்ன ? இது தொடர்பில் நமது சமூகவியல் துறையினதோ சட்டத் துறையினதோ நிலைப்பாடுகள் என்ன ? இதற்கு எதிர்வினையாற்ற வேண்டியது போலீசோ நீதிமன்றமோ மட்டுமல்ல . நீங்கள் தான் . உங்களின் துறை சார்ந்து மக்கள் மட்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் என்ன ?

ஏன் நம்முடைய போராட்டங்கள் பலவீனமானதாக தொடர்ச்சியற்றதாக இருக்கிறது என்பதற்கு பல்கலைக் கழகம் மிகப் பெரிய பொறுப்பை எடுக்க வேண்டும் . உதாரணம் , சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பாக எமது நிலைப்பாடுகள் தவறு என்றால் பல்கலைக் கழகம் அதற்கு எதிர்வினையாற்றியிருக்க வேண்டும் . ஆனால் நடந்தது என்ன ? ஒருவரின் மீது பழியைப் போட்டுவிட்டு ஒதுங்கி விடுவது.

நாங்கள் வந்தது படிப்பதற்கு என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் . நீங்கள் வந்தது இந்த சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் இல்லாதொழிக்க . நீங்கள் வந்தது இந்த சமூக சமமின்மைகளை கேள்வி கேட்க, எதிர்க்க . மாற்ற. அப்படி நம்பித் தான் இதையெல்லாம் எழுதுகிறோம் . நண்பன் இறந்தால் மட்டும் தான் போராடுவோம் . நமது எல்லைக்குள் புத்தர் சிலை வந்தால் தான் எதிர்ப்போம் . நமது கம்பஸில் கண்டிய நடனம் ஆடினால் தான் அடிபடுவோம் என்றால் இந்த இனத்தின் தலைவிதி அதன் சந்ததிகளின் போக்கினாலேயே அழிந்து விடும் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.

நண்பர்களே, இவர்களின் படுகொலையின் பின்னராவது நமது உட்கட்டுமானங்களை . அக விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் .நாம்  இன்னும் வலிமையாக வேண்டிய காலமிது. வெறும் "தமிழன்டா" கோஷம் எங்களைக் காப்பாற்றாது.

உதாரணத்திற்கு . நமது பல்கலைக் கழகம் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடிய பல்கலைக் கழகமென்று நான் கருதுவது JNU  பல்கலைக் கழகத்தை . உதாரணத்திற்கு ரோஹித் வெமுலாவின் மரணத்தை தேசிய பேசுபொருளாக்கி அவர்கள் சிலவாராம் நடாத்திய போராட்டங்கள் அற்புதமானவை . அந்த வழிமுறைகள் அவர்கள் போராடியபோது இருந்த ஒற்றுமை ஒரு நாளில் வந்ததில்லை . அது ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட பல்கலைக் கழகம் , அங்கே அரசியல் பேசலாம் ,அவர்கள் " புரட்சி ஓங்குக " என்பதை சொல்வதற்குப் பின்னலொரு வாழ்க்கை இருக்கிறது , அரசியல் சித்தாந்தம் இருக்கிறது . தொடர்ச்சி இருக்கிறது. அவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு குரலாயிருக்கிறார்கள். நாம் நமது வீட்டிற்குள் வரும் பிரச்சினைகளுக்கே பெரும்பாலும் குரலாயிருக்கிறோம். அவர்கள் போடுவது வெறும் கோஷமல்ல . அவர்கள் அதை வாழ்கிறார்கள் . நம்மைப் போல படித்து முடித்ததும் வெளிநாட்டுக்கோ அல்லது வேலையில் அமர்ந்து கொண்டு பேப்பரில் வரும் அரசியல்களைப் பற்றி அரட்டை அடிப்பது மட்டுமல்ல அவர்கள் செய்வது . அவர்கள் இந்திய வல்லரசை எதிர்க்குமளவு வளர்ந்ததற்கு வெறும் கோஷம் காரணமல்ல , அவர்களின் உரையாடல்களும் செயற்பாடுகளும் தான்அவர்களை மாற்றியது.

மேலும்நான் சாதாரண ஒருவன் . பல்கலைக்கழகத்திற்கு நான் தேர்வு செய்யப் படவில்லை . இவை எனக்குத் தோன்றிய கருத்துக்கள் .நீங்கள் இவற்றை பொருட்படுத்தலாம் . அல்லது விட்டுவிட்டுப் போகலாம் . ஆனால் சுலக்சனுக்கும் கஜனுக்கும் நீங்கள் செய்ய விரும்பும் , வாங்கிக் கொடுக்க  விரும்பும் நீதி கிடைக்க வில்லையென்றால் அது ஏன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதனை எழுதினேன் .

வெள்ளி, 7 அக்டோபர், 2016

ஆசிரியர் தினம் - யாழ்ப்பாண புதிய நடுத்தர வர்க்க சிந்தனைகளின் எழுச்சியும் வித்தியாசங்களை விளங்கி கொள்ளுதலின் முரண்பாடும்




இரண்டு பாடசாலைகளை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஒன்று 250 மாணவர்கள் படிக்கும் உள்ளூர் பாடசாலை, மற்றையது இரண்டாயிரம் பேர் படிக்கும் தேசிய பாடசாலை.

முதலாவது பாடசாலையின் ஆசிரியர் தினம் மற்றும் அதற்கு முந்தைய தினங்கள்

பெரிதாக முன்னாயத்தங்கள் எதுவுமில்லை. சில நிகழ்வுகள் , சில உரைகள் அநேகம் தலைமையுரை அதிபருரை சிறப்புவிருந்தினர் உரை,அவ்வளவு தான். சில பாடல்கள், முதல் நாள் வரைக்கும் என்ன பாடல் என்பது பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நூறு ரூபா சேர்ப்பதாக மாணவர்கள் முடிவெடுப்பார். நூறு பேர் காசு கொடுத்திருப்பர். மிச்ச பேரிடம் காசு வாங்கினால் அது கொடும் சுரண்டல் வகையை சாரும். குடும்பங்களை கொல்வதாக அமையும். ஒரு கோப்பை அல்லது சின்ன அன்பளிப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு நூறு ரூபா பெறுமதியான பரிசு, மாலை. அவ்வளவு தான் ஏற்பாடு.அவ்வளவு தான் முடியும்.

இந்த முறை முதல் நாள் புலமைப் பரிசில் முடிவுகள் வெளிவந்திருந்தன. சும்மா பேச்சுக்கு புள்ளிகளை கேட்டிருப்பார்கள், அவர்களுக்கு இது பற்றியெல்லாம் பெரிய அக்கறை இல்லை , வீட்டிலும் பாஸ் பண்ணினால் நல்லம் இல்லையெண்டால் பரவாயில்லை என்ற மனோபாவம்.

நிகழ்வு நாளன்று அரை குறையான பாடல்கள் , முன்னாயத்தங்கள் குறைவென்பதால் நிகழ்வுகள் சீரின்றி இருக்கும் . ஆனால் வழக்கம் போல எதைப் பற்றியும் கவலைப் படாமல் எல்லோரும் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

வழக்கம் போல அந்த நாளும் பொன்னாளே என்று அடுத்த நாள் பள்ளிக் கூடம் வருவார்கள்.


தேசிய பாடசாலை -

எஞ்சினியரும் டொக்டரும் பெரிய பெரிய அதிகாரிகளின் பிள்ளைகளும் வியாபாரிகளின் பிள்ளைகளும் , கொஞ்சம் கீழ் நடுத்தர வர்க்க பிள்ளைகளும் கூடிக் கொண்டாடும் வைபவம் . சேருக்கு சேட் வாங்கி குடுக்கோணும் . மிஸ்ஸுக்கு கேக் வாங்கி குடுக்கோணும் அது இதெண்டு பெரிய லிஸ்ட் ஒன்று வீடுகளுக்கு சென்று பிள்ளைகள் கேட்பார்கள். அவன் அது வாங்கி குடுக்கப் போறானாம் நாங்கள் இது வாங்கி குடுக்கோணும் இது தான் பிள்ளைகளின் வாதம் .

இங்கே முன்னாயத்தங்கள் படு பயங்கரமாக நடக்கும் . ஆயிரம் ரூபாய் வரை அன்பளிப்பு வாங்கபப்டும் . குறைந்த தொகைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். மாணவரும் பெற்றோரும் போட்டி போட்டுக் கொண்டு ஆசிரியர்களை கவர்வார்கள். புலமைப் பரிசில் முடிவுகளும் வெளி வந்ததால் விசேடங்களும் அதிகரித்திருக்கும். இது ஒரு பெரும் கார்னிவல் கொண்டாட்டமாக கரை புரண்டு ஓடும்.

இரண்டு பள்ளிகளின் மாணவர்களும் ஒரே கல்வி முறையில்  படித்தாலும் வர்க்க வேறுபாடுகளும் , மேல்மட்ட சிந்தனைகளும் தெளிவாக துலங்க ஆரம்பிக்கின்றன. எதிர்காலத்தில் இந்த இரண்டு பள்ளிகளின் பிள்ளைகளும் என்னவாக இருப்பார்கள் , அவர்கள் என்னவாக இருந்தாலும் எப்படி இருப்பார்கள் என்று தெளிவான சித்திரங்களை நாம் இப்பொழுதே பெற்றுக் கொள்ளலாம். அன்பை வெளிப்படுத்துவதில் தடையேதுமில்லை. ஆனால் அவற்றை பண்டத்தின் பெறுமதியை வைத்துத் தான் தீர்மானிக்க வேண்டுமா ?

ஆசிரிய நண்பரொருவர் சொன்னார் " தம்பி , போன வருஷம் வாங்கின மணிக்கூடுகளே ஒரு தொகை கிடக்கு , இந்த வருஷம் இன்னும் கூட , அதை வறிய மாணவர்களுக்கு கொடுத்துவிடுவேன்" என்று . இப்படியிருப்பது சிலர் தான் , ஆனால் மாணவர்களின் பரிசுகள் எப்படியிருக்கின்றன என்று பார்க்க முடிகிறது.

இந்த இரண்டு பள்ளிகளையும் ஒரு மாதிரியாகக் கொண்டு சிந்தித்தால் இரண்டினூடாகவும் கட்டியெழுப்பப் படும் சிந்தனை முறைகள் , பழக்க வழக்கங்களை நாம் இன்னும் விரிவாக ஆராய வேண்டும் . பல பாடசாலைகளில் இந்நேரம் பாஸ் செய்த மாணவர்களின் பதாகைகள் அச்சாகியிருக்கும் ,ஒரு வருடத்திற்கு பள்ளிக்கூட மானத்தை காப்பாற்றிய வீர் புருஷர்களாக அவர்களை கொண்டாடுவர். மற்றையவர்கள் தாங்களும் அதில் வர வேண்டுமென்றோ அல்லது தங்களின் பிள்ளைகளின் படம் அதில் வர வேண்டுமென்றோ இப்பொழுதிருந்தே தவத்தை ஆரம்பித்திருப்பார்கள்.

நேற்றுத் தான் கடையில் ஒரு பரீட்சை மாதிரி வினாத்தாளை பார்த்தேன் ,"தரம் ஒன்று - தவணை மூன்று " என்று இருந்தது . தலையை எங்கே கொண்டு போய் முட்டி கத்துவதென்று தெரியவில்லை.

எவ்வளவு கவனமாக நாம் அடிமைகளையும் நீதியற்றவர்களையும் மற்றவர்களை பற்றி கொஞ்சம் கூட அக்கறையில்லாத மனிதர்களையும்  உருவாக்குகிறோம். குழந்தைகள் பற்றிய மட்டுப்பாட்டினை நாம் உருவாக்க வேண்டும். இப்படி  மந்தையாட்டு  சிந்தனை  முறைகளை , இதயமற்ற சிறுவர்களை உருவாக்குவதை கொஞ்ச காலம் நிறுத்தி வைத்து விட்டு முறைமையில் இருக்கின்ற குறைபாடுகளை தீர்ப்பதை பற்றி யோசிக்க வேண்டும் , இணைந்து வேலை செய்ய வேண்டும்,

இப்பொழுதுள்ள நிலைமைகளில்
முதலில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசுகள் கொடுப்பதை தடை செய்ய வேண்டும்.இது ஏற்கனவே சட்டத்தில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை.   மாலைகள் அணிவிப்பது கூட வேண்டாத வேலை தான் .

மேலும் கொடுமை என்னவென்றால் மாணவர்கள்  காலில் விழுந்து வணங்குவார்கள் ,இவர்களும் ஆசீர்வாதம் வழங்குவார்கள் .இப்படியிருந்தால் ஆசிரியரும் மாணவரும் ஒரே நேரத்தில் புதிதாக ஒரே விடயத்தை உரையாடுவது சிந்திப்பது ,சமதையாக நடத்துவது எப்படி சாத்தியம்? . இவற்றையெல்லாம் எப்பொழுது கைவிட்டுவிட்டு சுயமரியாதை ,சமதர்மம் போன்றவற்றை கற்றுக் கொடுக்கப் போகிறோம்.

ஆசிரியர்கள் பற்றிய மிகையான கற்பனைகளை முதலில் எடுக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாம் தெரியும். விழுந்து வணங்க வேண்டும் . கேள்வி கேட்க கூடாது . போன்ற பழமைவாதச் சிந்தனைகளை ஊட்டி வளர்ப்பதில் இந்த ஆசிரியர் தினம் ஒரு மகா எடுத்துக் காட்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிலும் உள்ள நன்மை தீமைகளை சீர் தூக்கி பார்க்கும் மனநிலையை புத்தி கூர்மையை ஏற்படுத்தி விட்டு ஆசிரியர் தினத்தை கொண்டாடிப் பாருங்கள் . அப்படியொரு தினமே இருக்கது. ஆசிரியர் என்ற சொல்லுக்கு இருக்கும் அர்த்தங்கள் நமது காலத்தில்  சமூகத்தால் மீள ஒழுங்கு படுத்தப் பட வேண்டும். பாரம்பரியமான சுய சிந்தனைக்கு எதிரான இந்த கல்வி முறையை கேள்வி கேட்க்கும் ஒரு மாணவரும் ஆசிரியரின் காலில் விழ மாட்டார் . அதனை அறிந்த ஆசிரியர் எவரும் மாணவரை காலில் விழ அனுமதிக்கவும்  மாட்டார்கள்.

இதனை நாம் யாழ்ப்பாணத்தை வைத்து புரிந்து கொள்ள முயற்சித்தோம். மற்ற இடங்களையும் அவரவர்கள் தங்களின் அனுபவத்திற்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள வேண்டும்.

கல்வி முறையை தீர்மானிப்பதில் அதன் வெளிப்பாடுகளை தீர்மானிப்பதில் பள்ளிக் கூடங்களுக்கு தீர்மானகரமான பங்களிப்பு உள்ளது. அவற்றை உரையாடும் வெளிபப்டுத்தும் வல்லமையை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 கொஞ்சம் கூட ஜனநாயகமற்ற பண்புகளைக் கொண்ட ஒருத்தரை ஒருவர் போட்டியாளராக புரிந்து கொள்ளும் மனநிலையை மாணவர்களிடம் இருந்து மாற்றியெடுக்க அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய காலமிது என்பதை ஆசிரியர்கள் உரக்கச் சொல்லவேண்டும்.


(குறிப்பு - இதில் விரிவாக ஆராய பட வேண்டிய புள்ளிகள் உள்ளன , சில மட்டுமே இதில் கருத்தில் கொள்ளப் பட்டுள்ளன. )

கிரிஷாந்த்.

வியாழன், 6 அக்டோபர், 2016

"மெல்லத் தமிழ் இனிச் சாகும் "




'எழுக தமிழ்' தமிழ்  பேசும் சமூகங்களை எல்லாம் உள்ளடக்கியதா  என்பது தான் எழுக தமிழ் மீது உள்ள மையவாத அரசியல். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் அதுவும் பூர்வீகமாக இருப்பவர்கள் என்பவர்களுக்கு மட்டுமே எழுக தமிழ்.

வடக்கில் வாழும்  மலையக மக்கள் தமிழுக்கு பொருட்டில்லையா , முஸ்லீம் மக்கள்? , பழங்குடியினர் ?. இவர்கள் எல்லாம் ஏன் தமிழுக்குள் வரவில்லை. தமிழை நாம் ஏன் பிரதேசங்களுக்குள் சுருக்குகிறோம். அனைவரினதும் விடுதலை தான் எந்த விடுதலையையும் நீடித்து நிலைக்கச் செய்யும். பெண்கள், மாற்றுப் பாலினத்தவர், சாதிய அடிப்படையில் புறந்தள்ளப்படும் தொகுதியினர் என்று வடக்கு கிழக்கில் வேறுபாடுகள் உண்டு, தமிழ் பெண்களுக்கானதில்லையா  ? தமிழரசியலில் அவர்களின்  இடம் என்ன ? ஏன் தொடர்ந்து வெள்ளாள சாதிய பின்புலத்திலிருந்தே  பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள் வளருகிறார்கள்.

தமிழீழம் கிடைக்கட்டும் எல்லாம் மாற்றலாம் என்பது எவ்வளவு தூரம் சரியானது. சமஷடி கிடைக்கட்டும் ,அதிகாரம் கிடைக்கட்டும் என்று காத்துக் கிடக்கும் நேரமல்ல இது . வெளியாரின் வருகை இங்கே அவசியமே இல்லை. இது அகத்தில் , உட்பக்கமாக நிகழ வேண்டிய மாற்றம். இதனை  நாம் அழுத்தம்   கொடுக்க  வேண்டிய தருணமும்  இது தான்.

(இந்தக் கட்டுரையும் , இதற்கு முன்னர் இக் கட்டுரையாளர் எழுதிய பிற விடயங்களையும்  ஒரு உத்தி மட்டும் தான் .கால காலமாக ஊறிப் போயுள்ள பல நம்பிக்கைகளை கேள்வி கேட்க்கும் இடமாக தான் இத்தகைய நிகழ்வுகளில் இவரது கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.)

பெண்கள், சாதிய நிலைப்பாடுகள், குடும்ப உறவுகள் பற்றிய சமூக மதிப்பீடுகள் என்பவற்றில் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த முக்கியமான இரண்டு கால கட்டங்களை நாம் அவதானிக்க வேண்டும். ஒன்று விடுதலைப் போராட்டத்தின்  ஆரம்ப காலங்கள் .அதில் இருந்த நெகிழ்வுத் தன்மை சில மாற்றங்களுக்கு இடம் கொடுத்தது. சில மாற்றங்களை நிகழ்த்தியும் காட்டியது ஒரு நூறு வருட வரலாற்றில் இவ்வளவு பெருமளவான பெண்கள் திரண்டு போராடியது இங்கே தான் . தலைமைத்துவங்களுக்கு வந்ததும் அப்போது தான் . குடும்பங்களை கடந்ததும் அப்போது தான்.

இதே போல விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் இப்பொழுது உருவாகியிருக்கும் காலகட்டம் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் பெருமளவான உள்ளூர் தலைமைத்துவங்களை நாம் இழந்து விட்டோம். எஞ்சியிருப்பவர்களில் , மேலும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் பெண்கள் அதிகமும் அரசியலில் ஈடுபாடு காட்ட வேண்டியதும் ,அதனை நாம்வளர்க்க வேண்டியதும்  நமது கடமை.

இதை நடைமுறை ரீதியில் வளர்த்தெடுக்கக் கூடிய இடங்கள் இன்னமும் உள்ளது. உதாரணம் பாடசாலைகள், பல்கலைக் கழகம். பல்கலைக் கழகத்தில் இதனை நிகழ்த்துவதற்கு எந்த புறவய ரீதியான அனுமதியோ அதிகாரமோ தேவையில்லை. தகுதி வாய்ந்த பெண்களை அடையாளம் காணுதலும், அவர்களை தேர்வு செய்தலும், அவர்களை வளப்படுத்துதலும் செய்ய வேண்டும். அதனை நிகழ்த்துவது கஷ்டமென்றால் அரசியலில் பெண்கள் குறைவென்று பல்கலைக் கழக சமூகத்தை சேர்ந்த யாரும் விமர்சிக்கும் தகுதி உண்டா என்பதை சற்று யோசிக்க வேண்டும்.

இப்படி அன்றாட நிகழ்வுகளில் நமது நம்பிக்கைகள் சார்ந்தும் பிரச்சினைகள் சார்ந்தும் நமக்கிருக்கக் கூடிய கருத்துக்களை விமர்சித்துக் கொள்ளக் கூடிய வெளியை நாம் உருவாக்கியிருக்கிறோமா ? ,இணைய வெளியை விட  சாதாரண வெளியில் அது ஓரளவுக்கிருக்கிறது.

இணைய உலாவிகளில் பொதுவாக வைக்கப் படும் விமர்சனங்களில் சுய விமர்சனத்தோடான விடுதலை பற்றி பேசும் பொழுது , சிங்களவர்களுக்கோ அல்லது மற்ற இனங்களுக்கோ இதைச் சொல்லுங்கள் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? என்று கேள்வி வைப்பார்கள் . இது எவ்வளவு அபத்தம் நாம் நம்மை சுயபரீசீலனை செய்ய நம்மில் சில மாற்றங்களை செய்ய அவர்கள் தேவையில்லை .

இதனை இன்னும் விரிவாக உரையாட வேண்டும். எழுக தமிழ் பற்றி இன்னும் விரிவாக புரிந்து கொள்ளும் நோக்கில் 'தமிழ் உணர்வு ' பற்றி பார்க்கலாம். காலனித்துவத்திற்கு முந்தைய நிலையில் மொழியுணர்வு இவ்வளவு தீவிரமான பாதுகாப்பு வடிவமாக எழுச்சி பெற்றிருந்ததா என்றால் அது அவ்வாறு இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஆனால் காலனித்துவம் ஒடுக்குமுறையாக சுரண்டலாக மாறிய போது இந்த உணர்வுகள் வலிமை வாய்ந்த உணர்வுகளாக வளர்ச்சி பெற்றன. மேலும் இந்த உணர்வுகள் மொழியினூடாகவே கடடத்தப் படுகின்றது. இப்படி, இயல்பிலேயே மொழிக்கு உணர்வுபடுத்தும் ஒன்றுபடுத்தும் வரலாறு உருவாகியது.

இதனை தற்போதைய காலத்தில் எவ்வாறு உணருகிறோம். ஒரு மொழியின் மிக உச்சமான வடிவங்கள் எதையும் பொதுவாக யாரும் கண்டுகொள்வதில்லை. பத்திரிக்கை படிப்பது தான் அதிக பட்ச  வாசிப்பு. முழுநேர தென்னிந்திய சினிமா , நாடகங்கள் மற்றும் நேரலை நிகழ்ச்சிகள் பார்ப்பது தான் நமது வாழ்க்கை .இதனால்  எமது மொழி ஒட்டுமொத்தமாக மாறி வருகிறது. அதனூடாக பண்பாட்டு  மற்றும் சிந்தனை முறைகளில் மாற்றம் வேகமாக உருவாக்கி வருகிறது . இதனை மீட்டு எடுக்க யாரும் பெரிதாக முயற்சி செய்வதாக தெரியவில்லை. நூற்றுக்கு இருப்பது வீதம் பேர் கூட புத்தகங்கள் படிப்பதில்லை. நூலகங்களில் உயர்தர  பரீடசைகளுக்கு படிப்பதும் அல்லது பத்திரிக்கை படிப்பதும் தான் நடக்கிறது. ஆனால் இவர்களில் பலரின் மனநிலையை பாருங்கள் "யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப் பட்டமைக்கு கடும் துயரம் கொள்வார்கள் . ஆனால் அந்த நூலகத்தை ஒரு ஆயிரம் பேர் கூட ஒழுங்காக பயன்படுத்துவதில்லை. பேருக்குத் தான் "அடையாளம்" "தமிழர் சொத்து". பயன்படுத்தாத இந்தச்  சொத்துக்கள்  எப்படி இவர்களின் கவுரவம் ஆகிறதோ அதே போல் தான் மொழி உணர்வும்.

நமது மக்களுக்கு மொழியை பற்றி கிஞ்சித்தும் அக்கறை கிடையாது ஆனாலும் மொழி வளர வேண்டும் என்றால் என்ன செய்ய? . சிங்களவர்கள் தேவையில்லை. கொஞ்ச நாள் இப்படியே விட்டாலே இவர்கள் தமிழை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்க போய் விடுவார்கள்.


ஆகவே போலியான இந்த உணர்வு பேச்சு மொழியாக தமிழ் இன்னமும் இருப்பதலேயே தொடர்கிறது. மொழியைக் கொண்டாடத் தெரியாத இந்த பெரும்பான்மை, எப்படி மாற்றுக கருத்துக்களை ஏற்கும் , சிந்தியுங்கள் என்று சொன்னால் ஆத்திரம் தானே கொள்ளும்.

எழுக தமிழுக்கு ஐந்தாயிரம் பேரோ பத்தாயிரம் பேரோ வந்தார்கள் என்று சண்டைபிடித்து விட்டு மொழிப்பெருமை குலப்பெருமை கூவி விட்டு வீட்டில் படுத்திருந்து நாடகங்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் . சொல்லுங்கள் இந்த மொழிப்பற்றாளர்களில் எத்தனை பேர் மொழியை அறிந்திருக்கிறார்கள் அதன் அறிவை பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் மொழி ஒரு விவாத மொழி அதனை சரியாக புரிந்து கொள்பவர்கள் விவாதங்களை ஒரு நாளும் தனிநபர்களுக்குள் சுருக்கிக் கொள்ள மாட்டார்கள் , நண்பரொருவர் அடிக்கடி சொல்லுவார் "உங்களிடம் கருத்தியல் வறுமை உள்ளபோது தனிமனித தாக்குதல் தான் ஒரே ஆயுதம் ".

இதனை தான் இணைய விவாதங்களில் அவதானிக்க முடிகிறது, தனிமனிதனை அளவிடக் கூடாதென்று சொல்லவில்லை. உங்கள் மொழி உங்களுக்கு குறைந்த பட்ச நாகரீகத்தை கூட சொல்லித் தரவில்லையென்றால் எதற்காக தமிழ் எழவேண்டும் ?

முதலில் மொழியுணர்வை அன்றாட வாழ்வில் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பாருங்கள். ஒரு பாடசாலை தமிழ் விழாவை பாருங்கள் , கொக்க கோலாவும் , பிரியாணிச் சோறும் சாப்பிட்டுக் கொண்டு தமிழை எப்படி வாழ வைப்பதென்று  விழா எடுப்பார்கள். தாடி வைத்த மீசை வைத்த புலவர்கள் வாழ்ந்த மொழி ,அது நமது அடையாளம் . காலனித்துவம் வழங்கிய மழிக்கப்பட்ட தாடியும் மீசையும் இன்று ஒழுங்கின் அடையாளமாக உள்ளது. தாடி வளர்த்தால்  பாதி பேருக்கு வேலையில்லை. அரசாங்கத்திற்கு அத்தனையும் மழித்துக் கொடுக்க வேண்டும்.

இதையெல்லாம் ஒரு தலையாய பிரச்சினை என்று கூறவில்லை . ஒவ்வொரு சின்ன  விடயங்களிலும் எப்படி நாம் கவனங்களை இழந்திருக்கிறோம் . நமது அடையாளங்களை மாற்றியிருக்கிறோம் , மறந்திருக்கிறோம் என்று பார்க்க எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் விட காணாமல் போனவர்களின் பிரச்சினை பெரிது . அரசியல் கைதிகளின் விடுதலை பெரிது. காணிப் பிரச்சினை பெரிது . மீனவர் பிரச்சினை பெரிது. அரசியல் தீர்வு  பெரிது. ஆனால் அதே வேளை இதையெல்லாம் நாம் அடைவதற்கு  பயன்படுத்தும் நம்மை ஒன்றுபடுத்தும் மொழியும் உணர்வும் கூட பெரிது தானே ? அதனை ஒழுங்கு படுத்தும் போது இந்த உணர்வு பலமடையும். உதாரணமாக ஒரு கருத்தை பார்ப்போம் ,  சாதாரண விடயமாக கருதப்படும் விடயமொன்றில் ஒரு எதிர்ப்பை ஏற்படுத்தினால் அது எவ்வாறான பாதிப்பை நிகழ்த்த முடியுமென்று, அது ஒரு செய்தியை சொல்லுமென்று.

" தரம் ஆறு தொடக்கம் பதினொன்று வரையிலிலுள்ள வரலாறு பாட புத்தகத்தை எடுப்போம் . அதில் உள்ள வரலாற்றை அதில் ஒவ்வொரு இனத்திற்கும் உள்ள பக்க ஒதுக்கல்களை உள்ளோடும் அரசியல் குறைபாடுகளை பார்த்தால் இப்படியொரு வரலாற்றை  மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் வரலாற்றுணர்வற்ற  தலைமுறைகளை நாம் உற்பத்தி செய்யப் போகிறோம் , இதனை எதிர்த்து இத்தகையதொரு வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க முடியாதென்று ஆசிரியர் சங்கம் மறுக்க முடியாதா ? புறக்கணிக்க முடியாதா/ இது வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு மட்டும் உள்ள பிரச்சினை இல்லை . முஸ்லிம்கள் வரலாறும் அவ்வாறே , மலையக வரலாறும் அவ்வாறே . பழங்குடி வரலாறும் அவ்வாறே .

எல்லோருக்கும் சிங்கள வரலாறு தான் கற்பிக்கப் படுகிறது , அதனூடாகவே மற்ற வரலாறுகள் புரிந்து கொள்ளப் படுகிறது. எல்லா வரலாற்றுப் புத்தகங்களின் முன் அட்டைகளும் எந்த அடையாளங்களை சுமந்து நிற்கின்றன?. "

இப்படியான உணர்வுகளை வரலாறுகளை ஞாபகங்களை கடத்துவது ஆபத்தானது. அதனை எதிர்த்தால் அது ஒரு வலிமையான செய்தியல்லவா ? வடிவமல்லவா ?  அந்த உணர்வை  மாணவர்களுக்கும் கடத்த முடியும் ,அதுவே ஒரு எழுச்சியான மன நிலையை ஏற்படுத்தும்  .

இது செய்யக் கடினமான ஒன்று தான் , கட்டுரையாளர் குறிப்பிட விரும்புவது இப்படி அன்றாட வாழ்வில் கட்டியெழுப்பப் படும் பல்வேறு எதிர் மன நிலைகளிலிருந்து நம் தலைமுறைகளை காப்பாற்ற சமஸ்டிக்கோ  அதிகாரத்திற்கோ காத்திருக்கத் தேவையில்லை.அதனை அடைந்து கொள்வதற்கான  எதிர் வடிவமாகவே கூட இந்த மன நிலைகளை பயன்படுத்த முடியும்.

கிரிஷாந்த்