வெள்ளி, 27 ஜனவரி, 2017

மெரீனாவின் அலை ஒதுங்கிய கரை



ஏராளமான விமர்சனங்கள் வவுனியா உண்ணாவிரதப்  போராட்டத்தின் மீது உருவாகி வருகிறது. வழமையை விட  கடந்த ஆறு வருடங்களுக்கும் மேல் இடம்பெற்று வந்த காணாமல் ஆக்கப்பட்டு வந்தோர், அரசியல் கைதிகள், பயங்கரவாதச் சட்டம் தொடர்பான  பிரச்சினைகள் மற்றும் இன்னும் பல அரசியல் பிரச்சினைகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தற்போது உருவாக்கியிருக்கும் அலை என்பது புதியது. வழமையாக சோக ஸ்ட்டேட்டஸ் போட்டு கண்ணீர் புரொபைல் போட்டு கடந்து விடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களில் சில நூறு பேருக்காவது அரசியல் ரீதியில் தெருவில் இறங்குவதும், போராட்டங்களில் பங்கு பெறுவதும் பெரியளவிலான அனுபவங்களைக் கொடுத்திருக்கும் .

ஒரு போராட்டத்தை  ஒழுங்குபடுத்தும் போது எழக் கூடிய சிக்கல்களை தற்போது சிலநூறு பேராவது அறிந்திருப்பது எம்மைப் பொறுத்தவரை பெரிய மாற்றமே. இவ்வளவு காலமும் பத்து இருப்பது இளைஞர்கள் கலந்து கொண்ட , அதிலும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தான் அதிகம், ஆனால் இப்பொழுது  களத்திற்கு வந்திருப்பவர்கள் புதிய இளைஞர்கள்.

ஒருவகையில் தமிழ் நாட்டில் இடம்பெற்ற அலை தான் இவர்களில் பலரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த இளைஞர்கள் வெறும் தகவலளவில் பிரச்சினைகளை அறிந்து வைத்திருப்பதை விட அந்தப் பிரச்சினைகளின் பல்வேறு சிக்கலான நிலைமைகளையும் நாடு தழுவிய ரீதியில் இந்தப் பிரச்சினைகள் எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதையும் அறிய வேண்டும்.



மேலும் குறித்த ஒரு பிரச்சினையை பற்றிய போராட்டமோ அல்லது விழிப்புணர்வோ ஏற்படுத்தும் போது இளைஞர்கள் இனி கொஞ்சம் வாசிக்க வேண்டும். உரையாடல்களில் கலந்து கொள்ள வேண்டும். முதலில் அனைவரும் ஒன்றிணைந்து சிந்திப்பதற்கு சில பொது இணைப்புகள் தேவைப்படலாம். உதாரணம் - "தமிழன்டா ",ஆனால் அதற்கு அப்பால் அறிவு தான் தேவை. அதுவும் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் தோன்றவேண்டிய அறிவு தான் வெகுமக்களை வழி நடத்த வேண்டியது. அவர்கள் பொதுப்புத்தியில் சிந்தனைகளைக் கொண்டவர்கள். ஆனால் மாணவர்களும் இளைஞர்களும் அப்படிச் சிந்திக்க கூடாது.

வவுனியா உண்ணாவிரதமோ அல்லது இதற்கு முன்னர் இடம்பெற்ற பல போராட்டங்களோ அல்லது கவனயீர்ப்புகளோ பெரும்பாலானவற்றுக்கான எனது  ஆதரவு  என்பது குறித்த கோரிக்கை மீதே, அல்லது குறித்த பிரச்சினையின் மீதானது.

சில உதாரணங்களைப் பார்க்கலாம், அதன் போது அரசியல் பற்றிய விழிப்புணர்ச்சியோ அல்லது அரசு இத்தகைய பிரச்சினைகளை எப்படி கையாளும் என்பது பற்றியோ பெருமளவிலான அறிதல் எம்மிடமில்லை. இப்பொழுது வரை கூட இல்லை.

வித்தியாவின் படுகொலையின் போது அது ஒரு கொதிநிலை ஏற்படுத்தும் பிரசினையாக மாறியது. வித்தியா ஒரு குறியீடானாள். அதன் போது தன்னெழுச்சியான வெகுஜன எதிர்ப்புணர்வொன்று நாடு தழுவியும் ஏற்பட்டது.

ஆனால் அது ஒரு அரசியல் நகர்வாக மாறவில்லை. உணர்ச்சிகரமாகவே அந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுள்ளது.

இன்னுமொன்று ,பல்கலைக் கழக மாணவர்கள் படுகொலையின் போது இடம்பெற்ற மாணவர் குரலென்பது உடனடியாக பலமானது போல் தோன்றினாலும் அது உடனடியாக நீர்த்து விட்டது. அரசு மிகத் தந்திரமாக இந்தப் பிரச்சினையை வென்று விட்டது.  அவர்களின் மரண ஊர்வலத்தின் போது வீதியில் பொலிசே இல்லை. அது கட்டற்ற சுதந்திர வெளியை அதிலிருந்தவர்களுக்கு கொடுத்தது. அவர்கள் கத்திவிட்டு குடித்து விட்டு அடங்கி விட்டார்கள். அதற்குப் பின் மாணவர்கள் வீதியை மறித்து போராடிய போது அவர்களுக்கு ஊடகங்களுடன் எப்படி நடந்து கொள்வதென்று தெரியவில்லை. அவர்களுடைய நிர்வாகத்தை அவர்களால் எதிர்த்து நிற்கும் பலமிருக்கவில்லை.



இதைப் பற்றி விரிவாக உடனடியாகவே நான் எனது கருத்துக்களை முடிந்த அளவில் அவர்களுக்கு வழங்கியிருந்தேன். ஆனால் அப்படி உடனடியாக புரிந்து கொள்ளும் நிலை இருக்காதென்பதும் தெரியும். இன்றும் கூட அந்தப் பிரச்சினை தொடர்கிறது.

(அந்த நேரத்தில் நான் எழுதிய கட்டுரையின் இணைப்பு - http://kirisanthworks.blogspot.com/2016/10/blog-post_25.html )

நான் பங்குபற்றிய சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை கூட பல வாக்குறுதிகளுடனும், வழக்குடனும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. எதுவும் வெற்றிகரமான ஒன்றை வாங்கித் தரவில்லை. அதற்கு அருந்தலான உதாரணங்களே உண்டு.

சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பில் "Green Trincomalee " யின் படிப்பினைகள் நாம் அவதானிக்க வேண்டியவை. வெகு சிலரைக்  கொண்ட அந்த அமைப்பானது மெதுமெதுவாக எப்படி பொதுமக்களைத் திரட்டி போராடியதும் அதே வேளையில் அரசியல் ரீதியான நகர்வுகளை அவதானித்ததையும் நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

இன்னும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு நாம் பழக்கப்படவில்லை, வெல்வதற்கான போராட்ட வழிகளை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம் .

 அரசியலற்றதாக எந்தப் போராட்டமும் இருக்கமுடியாது. குறைந்தது வெகுஜன அரசியலாவது அதிலிருக்கும்.அதனை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.



இளைஞர்கள் மத்தியில் அரசியல்வாதிகள் மேல் வெறுப்பிருப்பது அல்லது சுயலாபங்களுக்காக போராட்டங்களை  பயன்படுத்துபவர்கள் மீது எதிர்புணவிருப்பது இயல்பே. ஆனால் அரசியல் மீது வெறுப்பிருப்பது ஆபத்தானது. "அரசியல்" சமூகத்தின் மிக முக்கியமான இயக்கம். அதன் மீது வெறுப்புணர்வு கொள்வது ஆபத்தான போக்கு, நாம் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும், கற்க வேண்டும், பயன்படுத்த வேண்டும். வெகுஜனத் தளத்திலான ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியை கட்ட வேண்டியது இளைஞர்களின் வேலையே. அதனை இளைஞர்கள்  எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. அதற்கான அனுபவங்களே தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.



பலமான புரிதலிலிருந்தே வெற்றி பெறும் அரசியல் தொடங்கும்.  அதனை நாம் செயல்வாதமாக்கும் போது தான் இந்தப் பிரச்சினைகளின் தீர்வுகள்  சாத்தியம்.

கிரிஷாந் -  

வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு - ஒரு அசலான மாற்றத்தைக் கற்றுக் கொள்ளுதல்






தமிழ் நாட்டில் இடம்பெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்திற்கு உலகம் முழுவதுமுள்ள பெரும்பாலான தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழக இளைஞர்களினதும் மக்களினதும் போராட்ட நியாயத்தினை அங்கீகரித்து கவனயீர்ப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். கடந்த பல தசாப்தங்களில்  ஒரு மொழியாக தமிழர் சேர்ந்து நிகழ்த்தும் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம்  இதுவாகத் தானிருக்கும். ஈழத்தமிழர் போராட்டம் முக்கியமானது. ஆனால் இதன் அம்சமும் வடிவமும் மிக முக்கியமாக நாம் அவதானிக்க வேண்டியதென்று நினைக்கிறேன்.





 இவ்வளவு கேளிக்கையான "கார்னிவல்ஸ்க் " தன்மை கொண்ட போராட்டம் தமிழகச் சூழலிலும் சரி பிற தமிழ் பேசும் சமூகங்களிலும் சரி இதுவரை இடம்பெற்றதாகத் தெரியவில்லை. கார்னிவல்ஸ்க் என்பது பெரிய அதிகாரத்தை கேலி செய்தும் பகிடி விட்டும் கொண்டாடுவது. இப்பொழுது ஓ. பி .எஸையும் மோடியையும் தமிழக எம்பிக்களையும் கிழித்து தோரணமாக்கி தொங்க விடும் பல வசனங்களையும் படங்களையும் காணொளிகளையும் நாம் பார்த்து வருகிறோம். ஆண்களும் பெண்களும் அரச அதிகாரத்தை மிகக் கேவலமாக பேசித் தள்ளுகிறார்கள். இதற்கு  ஒரு வகையில் இந்தியாவில் உள்ள ஜனநாயகச் சூழலும் காரணம். ஈழத்தில் இந்த நிலைமை வித்தியாசம்.

ஆனாலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல படிப்பினைகளை தமிழக இளைஞர்கள்  தொடர்ந்தும் இந்த போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

* சூழல் சார்ந்த அவர்களின் பொறுப்பு. போராட்டம் நடந்து கொண்டிருக்கும்  பல இடங்களிலும் போராட்டக்காரர்களால்  பயன்படுத்தி போடப்படும் கழிவுகளை அவர்களே சுத்தம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.



* மிகவும் க்ரியேட்டிவாக போராட்டத்தை பல உத்திகள் மூலம் நீர்க்க விடாமல் அல்லது சோர்ந்து விடாமல் ஏற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். மெமே கிரியேட் செய்து  சும்மா சுற்றுகிறவன் என்றவரிலிருந்து முகநூல் பிரபலங்கள், கார்ட்டூன் வரைபவர்கள் வரை தமது மொத்த உழைப்பையும் இந்த விடயத்தின் ஆழத்தில் உள்ள பல அடிப்படை விடயங்களையும் வெளியில் கொண்டு வைத்து அதனை எளிமையாக ஒரு "மாஸ்" அதாவது பெருந்திரளான மக்களிடம் கொண்டு சேர்ப்பதென்பது மிக முக்கியமான விடயம். எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் போராட்டங்களிலும் ஒரு வகை வரட்டுத்தனங்களைத் தவிர்த்து கேளிக்கையும் கொண்டாட்டமுமாக குறைந்த பட்ஷம் க்ரியேட்டிவாக எளிமையாக பெருந்திரளிடம் நமது கோரிக்கைகளை முன்வைப்பது அவசியமான ஒன்று.








* உற்சாகமான பேச்சாளர்கள், பல விடயங்களையும் கவனத்திற்குட்படுத்தும் போக்கு என்பதும் முக்கியமானது. இது ஜல்லிக்கட்டுக்கு மட்டுமானதில்லை என்பதை இரண்டாவது நாள் முதல் இளைஞர்களின் பல்வேறு குரல்களினூடாக நாம் அறிகின்றோம். விவசாயிகளைப் பற்றி, மரபுகள் அழிவதைப் பற்றி, உணவு, சுகாதாரம் போன்றவற்றின் முக்கியத்துவம், உள்ளூர் அடையாளங்களை பேண வேண்டியதன் அவசியம் பற்றி பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருவது ஆரோக்கியமானது. இந்த வகையான கருத்துக்கள் ஒரு பெருந்திரளான மக்களிடம் கருத்தாக சென்று சேர்வது இந்த மாதிரி ஒரு பொதுக் குறிகாட்டியான பிரச்சினைகளின் போது மட்டுமே சாத்தியம். வாழ்க்கை முழுவதும் கத்தினாலும் கும்பல் மனநிலையில் மாற்றங்களைக் கொண்டு வருவது கடினம், ஆனால் சில சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அவற்றை வெகுஜன கருத்தியலாக மாற்றுவது மிக முக்கியமானது. அவற்றை செய்யும் அந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த வகையான கருத்துக்களை உருவாக்குவதற்காக தமது வாழ் நாள் முழுவதும் உழைத்த  பலரின் உழைப்பும் அவர்கள் உருவாக்கிய அறிவு சார் கருத்துக்களும் தான் இன்று கோஷங்களாகவும் பலமான எதிர் விவாதங்களாக உருவாக்கியிருப்பதையும் யாரும் மறந்துவிடக் கூடாது.

* "மாஸ் மெண்டாலிட்டி " அதாவது கும்பல் மனநிலைக்கென்று இருக்கக் கூடிய பல பொதுவான வரையறைகளை மீறி இந்த போராட்டம் இடம்பெறுவது முக்கியமானது. தமிழ்நாடு தன் மேல் கவிந்திருந்த பல தவறான அபிப்பிராயங்களை மாற்றிக் காட்டியுள்ளது. இனி தமிழ்பேசும் சமூகங்களில் இடம்பெறும் சாத்வீக அற வழிப் போராட்டங்கள் அனைத்திற்கும் ஒரு வித்தியாசமான முன்னுதாரணமாக இது மாறியிருக்கிறது. சமூகவலைத்தளங்கள் பற்றிய பொதுப்புத்தியில் உருவாகியிருந்த பல கருத்துக்களையும் இந்த மாற்றம் புரட்டிப் போட்டிருக்கிறது.






* எனது அவதானிப்பில் கடந்த எட்டு வருடங்களில் தன்னெழுச்சியாக ஈழத்தில் இப்படி இளைஞர்கள் எதற்காகவும் ஒன்று கூடவில்லை. வித்தியாவின் போராட்டம் தவிர்த்து.

இதில் தவறுகள் இருக்கலாம், இது மேலோட்டமானதாகவும் இருக்கலாம் ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள். எங்களுடைய சூழல் தமிழகத்தைப் போன்றதல்ல. இங்கே பல சிக்கல்கள் உண்டு. ஏனைய பல பொதுப்பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் இப்படி வரவில்லைத் தான், ஆனால் இளைஞர்கள் இப்படியான ஓரளவு ஆபத்துக்குறைந்த கவனயீர்ப்புக்களிலாவது ஒன்று திரள்வது, ஜனநாயகத்தை, அற வழிப் போராட்டங்களை நடத்துவது தேவையான ஒன்று. அது எதிர்காலத்தில் வளரும் போக்குக் கொண்டது. அப்படி ஆகவில்லையென்றால் கூட பரவாயில்லை, ஆனால் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை.










இந்தத் தலைமுறையில் போராட்ட வடிவங்கள் மாறத் தொடங்கி விட்டன. நாம் யாரிடமிருந்தும் நல்லவற்றைக் கற்றுக் கொள்ளலாம். அதிலெல்லாம் பெரிய தவறிருப்பதாகத் தெரியவில்லை. இனி ஈழத்தில் நடக்கும் போராட்டங்களில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கவனயீர்ப்புகளில் பங்குபற்றும் ஒரு பத்துப்பேர் வந்தாலும் அது பெரிய வெற்றியே. சும்மா இருப்பதை விட எதையாவது முயற்சி செய்து பார்ப்பது தான் நமக்கிருக்கும் ஒரே வழி .

கிரிஷாந்த்- 

ஜல்லிக்கட்டுக்கு ஏன் ஈழத்தில் ஆதரவு?




தொடர்ந்து ஒரு சில மாற்றுக் கருத்தாளர்களால் இந்தக் கேள்வி முன்வைக்கப் பட்டு வந்துகொண்டிருக்கிறது. மூன்று விதத்தில் ஈழத்திலிருக்கும் கருத்தாளர்கள் அதனை எதிர்ப்பதாக நான் மட்டுக்கட்டுகிறேன்.

1 - இது ஒரு சாதிய விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.
2 - இது ஒரு ஆணாதிக்க விளையாட்டு இதனை நாம் ஆதரிக்கக் கூடாது.
3 - ஈழம் தனக்கான தனிப் பண்பாட்டை உருவாக்க வேண்டும், இங்கேயே 1008  பிரச்சினைகள் உள்ளன. அதனால் நாம் இப்பொழுது இதற்காக கவலைப் பட தேவையில்லை.

நல்லது.

1 -நாம் சொல்வது போல் இது சாதி விளையாட்டு இதனைப் பற்றி அறியாமல் நாங்கள் இங்கே கொந்தளிக்கிறோம் என்றால் , குறித்த சாதியைச் சேர்ந்து இத்தனை லட்ஷம் பேர் இருப்பார்கள் என்பது ஆச்சரியமான தகவலே, எங்களை விட அங்கிருப்பவர்களுக்கு தெரியுமே இது. ஏன் இத்தனை பேர் திரளுகின்றனர். பொது அடையாளங்களின் கீழ் இணையும் மக்கள் தொகுதியை நாம் சாதிய வெறியர்களாக சிந்திப்பது பிழையான விடயமாகவே நான் கருதுகிறேன்.

2 - ஆணாதிக்கம் என்றால், அது உரையாடப் படாமல் இல்லை, அது நிகழ்ந்து கொண்டுதானிருந்தது. ஆனால் இப்படியான  வாதங்களை வைத்துத் தான் தொடர்ந்து பன்னட்டுக் கம்பனிகள் மக்களை ஒன்று திரள விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களின் கருணையில் காசு தான் தெரியும். இதனைக் கூடவா நாம் தெரியாமலிருக்கிறோம். இந்தப் பக்கத்தை நாம் எப்படி தாண்டப் போகிறோம்.

3 - ஈழத்தின் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை விட்டுவிட்டு ஏன் இதற்கு குரல் கொடுக்கிறார்கள். முதலில் ஒரு விடயம், ஈழம் தொடர்ந்து வெகுஜன எழுச்சிகளுக்கு பழக்கப்படாத ஒரு மக்கள் திரளாகவே நான் பார்க்கிறேன். மேலும் இவர்களின் தன்னெழுச்சியென்பது எனக்கு எப்பொழுதும் ஆச்சரியத்தை தருவது, மிக வித்தியாசமான நிகழ்வுகளுக்கே அவர்கள் தொடர்ந்தும் துலங்கலைக் காட்டி வருகிறார்கள்.

இப்பொழுது நடந்தது ஒரு கவனயீர்ப்பு மாத்திரமே. யாழ்ப்பாணத்தில் நடந்ததைத் தொடர்ந்து வேறு வேறு இடங்களில் யாரென்றே தெரியாதவர்கள் குரல் கொடுக்கவும் வீதிக்கு வரவும் கூடியதாக இருந்திருக்கிறது. நான் சமூகத் தளத்தில் வேலை செய்ய ஆரம்பித்து ஒரு ஆறு வருடங்கள் இருக்கும். ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு பத்துப் பேரைத் திரட்டுவதென்பது மிகவும் கடினமான காரியம். அதே நேரம் ஒருவர் குறித்த ஒரு பிரச்சினைக்காக அவர் போராடுகிறார்  அல்லது ஆதரிக்கிறார் என்பதற்கு பல காரணிகள் இருக்கலாம். எல்லோரும் ஒரே நோக்கில் போராடுவதுமில்லை ஆதரிப்பதுமில்லை , ஒரே நோக்கில் எதிர்ப்பதும் மறுப்பதுமில்லை. எதிர்க்கும் போதும் ஆதரிக்கும் போதும் ஏற்படும் ஆபத்துக்களை சீர்தூக்கிப் பார்த்தே எந்த நிலைப்பாட்டையும் நாம் எடுக்க முடியும்.

வெகுஜன எழுச்சி அல்லது இளைஞர் எழுச்சி என்பது கணிதமல்ல.  அது ஒரு தொடக்கம் அல்லது குறிகாட்டி. என்னைப் பொறுத்தவரை கடந்த ஆறு வருடங்களில் நடந்த பெரும்பாலான வெகுஜன எழுச்சிகளிலிருந்து சிறு குழு உரையாடல்கள் வரை சென்றிருக்கிறேன். பங்கு பற்றியிருக்கிறேன். ஒன்றுமே ஒன்றுபோலில்லை. பெரும்பாலான சிறு கூட்டங்கள், ஒரு வகை பலவீனத்தால் மக்களை, இளைஞர்களை வசை பாடிக் கொண்டேயிருக்கும். சில குழுக்கள் அதனை அறிவார்ந்த தளத்தில் நகர்த்தும். இரண்டிலும் நான் பங்குபற்றியிருக்கிறேன். அந்த அடிப்படையில் வெகு ஜன எழுச்சியை அல்லது இளைஞர் தொகுதியின் போராட்டங்களை எனது பாடசாலைக்கு காலங்களிலிருந்தே அவதானித்து வருகிறேன்.



அது முற்றிலும் விசித்திரமானது. நாம் மனதில் நினைப்பதைத் தான் அவர்கள் பேச வேண்டும் கத்த வேண்டும் என்பதெல்லாம் நடக்காது. இடை நடுவே அதிகாரத்தை எதிர்த்து அவர்கள் கெட்ட வார்த்தையை எறிவார்கள். அதனை பார்த்துவிட்டு இதெல்லாம் ஒரு போராட்டமா என்றெல்லாம் கேட்க முடியாது. குறைந்தது பத்துபேர் செய்த போராட் டத்திலிருந்து ஐந்தாயிரம் பேர் உள்ள போராட்டங்கள் வரை கலந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் ஏராளம் கற்றுக் கொள்ள இருக்கிறது. நான் என்னை ஒரு கவிஞனாகவே மதிக்கிறேன். நான் எனது காலத்தின் மக்கள் திரளின் போராட்டங்கள் உணர்வு வெளிப்பாடுகளின் போதெல்லாம்   முன் வரிசையில் நிற்கவே விரும்புகின்றேன். அது சாமானியர்கள் நிற்கும் வரிசை, அவர்களுக்கிருக்கும் கோபத்தையும் உணர்வையும் நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்காகவே எல்லா நேரங்களிலும் மக்களோடு நிற்கப் பிரியப் படுகிறேன். நான் அதிகமும் எதிர்த்த எழுகதமிழுக்குக் கூட நான் சென்று அங்கிருப்பவர்களுடன் உரையாடியும் அவதானித்தும் வந்தேன். இது ஒரு முக்கியமான இயக்கம் என்று நினைக்கிறேன்.

எல்லாப் போராட்டங்களிலுமே விமர்சனங்கள் உண்டு. அது எல்லோருக்கும் உண்டு, கலந்து கொண்டவருக்கு உண்டு, பார்வையாளருக்கும் உண்டு. அதனை நாம் உரையாட வேண்டும்.

ஆனால் இப்போது என்னைப்  பொறுத்தவரை தமிழக மக்களின் இந்தப் போராட்டத்திற்க்காக என் வாழ்நாளின் இரண்டு மணித்தியாலங்களை சிலவழிப்பது அவ்வளவு பெரிய பாவமாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் எல்லா அமைப்பிற்கும் ஒரு கொள்ளளவு இருக்கிறது, அதற்கு அமைவாகவே எதனையும் செய்ய முடியும் அது போக, ஏதோ ஒரு அதிகாரத்திற்கெதிராக  மக்கள் சுருண்டிருக்கும் தமது கால்களை நகர்த்தி ஓரடியை முன்னுக்கு வைத்தும் ஒரு கையை வானுக்கு எறிந்தும் நிலமதிரக் குரலெழுப்பியும் நிற்பார்களெனில்  அவர்களோடு நானும் நிற்பேன். அது ஒரு நம்பிக்கை. அது ஒரு தொடக்கம்.

கிரிஷாந்த்-